சித்திரவதை குற்றச்சாட்டுகள் தொடர்பாக உடனடியாக அரசாங்கம் செயற்பட வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அழைப்பு விடுத்திருக்கிறது. சந்தேக நபர்களை சித்திரவதை செய்தும் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியும் விசாரணையாளர்கள் செயற்பட்டிருப்பதாக குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், அவர்களுக்கு எதிராக அரசாங்கம் உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென அக்கட்சி கோரிக்கை விடுத்திருக்கிறது. அண்மையில் இலங்கைக்கு வருகை தந்திருந்த ஐ.நா. மனித உரிமை அதிகாரிகள் கண்டறிந்த விடயங்கள் கவலையளிப்பவையாக இருப்பதாகவும், அவர்களின் அறிக்கைகள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு இந்த மாதிரியான பழைய நடைமுறைகளை நிறுத்துவதற்கு செயற்பட வேண்டியதும் அரசாங்கத்தின் பொறுப்பு என எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் சிங்குவா செய்தி சேவைக்கு தெரிவித்திருக்கிறார். சித்திரவதை தொடர்பான ஐ.நா.வின் விசேட அறிக்கையாளர் ஜுவான் ஈ மென்டிஸ் 9 நாள் விஜயத்தை இலங்கைக்கு மேற்கொண்டிருந்தார். யுத்தத்தின் போது 16 ஆயிரத்துக்கும் 22 ஆயிரத்துக்கும் இடைப்பட்ட எண்ணிக்கையிலான ஆட்கள் காணாமல் போயிருப்பதாக சாட்சியத்தின் மூலம் தான் அறிந்திருப்பதாக நிருபர்களிடம் ஜுவான் ஈ மென்டிஸ் தெரிவித்திருந்தார். யுத்தம் முடிவடைந்ததைத் தொடர்ந்த காலப்பகுதியில் இலங்கையின் குற்றவியல் மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகளை விசாரணை மேற்கொள்வோர் சந்தேக நபர்களை சித்திரவதைபடுத்துவது தொடர்ந்தும் காணப்பட்டதாக அவர் தெரிவித்திருந்தார். விசாரணையாளர்களினால் இத்தகைய பழைய நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டிருக்குமானால் அரசாங்கம் ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக்கு பதிலளிக்க வேண்டியிருக்கும் எனவும் பேரவை விரைவில் கூடவுள்ளதாகவும் சம்பந்தன் தெரிவித்திருக்கிறார். முழுமையான முறைமையையும் குற்றஞ்சாட்ட முடியாததாக இருக்கின்ற போதிலும் குறிப்பிட்ட சில தனிப்பட்டவர்கள் சித்திரவதைக்கு பொறுப்பாக உள்ளனர். இந்த நடைமுறைகள் உடனடியாக நிறுத்தப்படுவதை உறுதிப்படுத்துவது அரசாங்கத்திற்கு அவசியமான ஒன்றாகும். உடனடியாக அவர்கள் விசாரணையை ஆரம்பிக்க வேண்டும் என்று சம்பந்தன் தெரிவித்திருக்கிறார். ஐ.நா. கண்டறிந்த விடயங்கள் தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என அரசாங்கம் உறுதியளித்திருக்கிறது. மீண்டும் இடம்பெறுவதற்கு இடமளிக்கப்படுவதை உறுதிப்படுத்துவதற்காக ஐ.நா. கண்டறிந்தவற்றை விசாரணை செய்யப்போவதாக அரசாங்கம் தெரிவித்திருக்கிறது. – See more at: http://www.thinakkural.lk/article.