இலங்கையில் தமிழ் மக்களது அரசியல் உரிமை பிரச்சினைக்கு நிரந்தரமானதும், நியாயமானதுமான தீர்வைப் பெற்றுக்கொள்வதற்கான சரியான சந்தர்ப்பம் அமைந்திருக்கின்றது. இந்தச் சந்தர்ப்பத்தை சரியான முறையில் ஒற்றுமையாக நின்று பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் அழைப்பு விடுத்துள்ளார்.

யாழ்ப்பாணம் – மருதனார்மடத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற மே தினக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

தமிழ் மக்கள் பல அழிவுகளைச் சந்தித்திருக்கின்றார்கள். உயிர்த் தியாகங்களை செய்திருக்கின்றார்கள். அவ்வாறான ஒரு சந்தர்ப்பத்தை நாங்கள் ஒன்றாக நின்று சரியாக பயன்படுத்தி பகிரப்பட்ட இறமை அடிப்படையில் தமிழர்களின் சரித்திர ரீதியான வடகிழக்கு தாயகத்தில் நியாயமானதும், நிரந்தரமானதுமான தீர்வைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.

இலங்கையில் தமிழ், சிங்கள இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பது தமிழ் மக்களுக்கு மட்டுமல்ல இலங்கைக்கே அது முக்கியமான ஒன்றாகும்.

இந்த நாடு கடன் சுமையில் இருந்து நீங்கவேண்டுமானால், நாட்டில் வெளிநாட்டவர்கள் முதலீடுகளை செய்யவேண்டுமானால், இந்த நாடு அபிவிருத்தியடைய வேண்டுமானால், இந்த நாட்டு மக்களுடைய வாழ்க்கைத் தரம் உயர்வடையவேண்டுமானால் இனங்களுக்கிடையில் நல்லிணக்கம் உருவாக வேண்டும்.

இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படவேண்டும். இனப்பிரச்சினைக்கு தீர்வைக் காணாமல் இந்த நல்லாட்சி அரசாங்கம் அல்ல வேறு எந்த அரசாங்கமாக இருந்தாலும் தங்கள் இலக்கினை ஒருபோதும் அடைய முடியாது என்பதை நாம் திட்டவட்டமாகச் சொல்ல விரும்புகின்றோம்.

மேலும் இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கான ஒரு சரியான சந்தர்ப்பம் தற்போது அமைந்திருப்பதாக நான் நம்புகின்றேன். இந்தச் சந்தர்ப்பம் சாதாரணமாக அமையவில்லை. இதற்கென எமது மக்கள் பல அழிவுகளைச் சந்தித்திருக்கின்றார்கள், பல துன்பங்களைக் கண்டிருக்கின்றார்கள், பல உயிர்த் தியாகங்களைச் செய்திருக்கின்றார்கள்.

அவ்வாறு கிடைக்கப்பெற்றிருக்கும் சந்தர்ப்பத்தை நாங்கள் சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். இந்தக் கருமத்தில் வேற்றுமை என்ற கருத்துக்கே இடமில்லை.

நாம் அனைவரும் ஒன்றிணைந்து இந்த விடயத்தில் செயலாற்றவேண்டும். 2009ற்கு பின்னர் வந்த காலங்களில் ஐ.நா மனித உரிமைகள் கூட்டத்தொடரில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன.

எமக்காக அவற்றில் இறுதியாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு ஸ்ரீலங்கா அரசாங்கம் ஒப்புதல் தெரிவித்திருக்கின்றது. இதனடிப்படையில் உண்மைகள் கண்டறியப்படவேண்டும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்கவேண்டும், இவ்வாறான சம்பவங்கள் இனிமேலும் நடக்காமல் பாதுகாத்துக் கொள்ளவேண்டும். இவை நடக்கவேண்டுமானால் எமக்கு அரசியல் தீர்வு கிடைக்க வேண்டும்.

இந்த விடயத்திற்கும் இங்கே முன்வைக்கப்பட்ட தொழிலாளர்களுடைய பிரச்சினைகளுக்கும் நேரடியான தொடர்புகள் உண்டு. அந்தவகையில் எமக்கான அரசியல் தீர்வு கிடைக்கும் போது அந்தப் பிரச்சினைகள் இருக்காது. இங்கே பல பிரச்சினைகளைப் பேசியிருந்தீர்கள். கடற்றொழிலாளர் பிரச்சினைகள், விவசாயிகளின் பிரச்சினைகள் மற்றும் பல பிரச்சினைகள் இங்கே பேசப்பட்டிருக்கின்றன.

உண்மையில் இறமை பகிரப்பட்டதன் அடிப்படையில் எமக்கான தீர்வு ஒன்று கிடைத்திருந்தால் இவ்வாறான விடயங்கள் இன்றைக்கு பேசப்பட்டிருக்க வாய்ப்பில்லை.

மேலும் நாம் பிரிவினை கேட்கவில்லை. நாட்டை பிரிக்கவேண்டும் என கேட்கவில்லை. நாங்கள் கேட்பது ஒன்றே உலகத்தில் பல இனங்கள், பல மதங்கள் சார்ந்த மக்கள் எப்படி தங்களைத் தாங்களே நிர்வகித்துக் கொண்டு வாழ்கின்றார்களோ அவ்வாறான ஒரு முறைசார் தீர்வையே நாங்கள் கேட்கிறோம்.

அவ்வாறான தீர்வைப் பெற்றுக்கொள்ள நாங்கள் தயார். இந்த விடயத்தில் நாங்கள் ஒற்றுமையாக செயலாற்றினால் சர்வதேசத்தின் நன்மதிப்பையும் பெற்றுக் கொள்ள முடியும்.

மேலும் காணாமல்போனவர்கள் விடயத்தில் தீர்வு காணப்படவேண்டும், மக்களுடைய காணிகள் விடுவிக்கப்படவேண்டும். என்பவற்றில் நாங்கள் செய்யக்கூடியவற்றை செய்து கொண்டிருக்கின்றோம்.

2015 ஆம் ஆண்டு வரையில் எதுவுமே நடக்காத நிலையில் தற்போது சில விடயங்கள் நடைபெற்றிருக்கின்றன. அந்த விடயங்கள் மேலும் துரிதமாக நடைபெறுவதற்கு எங்களால் முடிந்தவற்றைத் தொடர்ந்தும் செய்வோம்.

இன்றைய நாள் தொழிலாளர்களுக்கான நாள் வடகிழக்கு மாகாணங்களை சேர்ந்த தொழிலாளர்கள் மிகமோசமான இன்னல்களை சந்தித்திருக்கின்றார்கள். அவர்கள் எங்கள் சமூகத்தின் முதுகெலும்பாக திகழ்கின்றவர்கள். அவர்களுடைய உரிமைகளுக்காக நாங்கள் எப்போதும் குரல் கொடுப்பதற்கு தயராகவே இருக்கின்றோம்.

தொழிலாளர்களுடைய வாழ்க்கை திருப்திகரமாக அமைந்தால்தான் சமூகம் திருப்திகரமானதாக இருக்கும். தொழிலாளர்களுடைய இந்த நாளை அவர்கள் அடைவதற்காக சர்வதேச மட்டத்தில் பல போராட்டங்களை நடத்தி வெற்றி பெற்ற நாளே இன்றைய நாள். இந்த நாள் இலங்கையில் அன்னியர் காலத்திலும், சுதந்திரம் பெற்றதன் பின்னரும் நினைவுகூறப்படுகின்றது.

இந்நிலையில் இந்த நாளின் முக்கியத்துவத்தை உணர்ந்து இந்நிகழ்வுகளை ஒழுங்கமைத்தவர்கள் உன்மையில் பாராட்டப்படவேண்டியவர்கள், இதேபோல் இப்போது அரசியலமைப்பு மறுசீரமைப்பிற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

அதில் அடிப்படை உரிமைகள், மனித உரிமைகளுக்கான தனியான கோவை உருவாக்கப்படவேண்டும். அதில் தொழிலாளர் உரிமைகளும் உள்ளடங்கும். அந்த விடயத்தில் நாங்கள் கரிசனை செலுத்துவோம்.

மேலும் வடகிழக்கு மாகாணங்கள் அதிகம் போரினால் பாதிக்கப்பட்ட மாகாணங்கள் என்னும் அடிப்படையில் விசேடமாக வடகிழக்கு மாகாணங்களை மேம்படுத்த திட்டங்கள் மேற்கொள்ளப்படுவதாக அறிகின்றோம்.
அந்த விடயத்தில் நாங்கள் பங்காற்றி நிபுணர்களின் கருத்துக்களையும் உள்வாங்கி செயலாற்றுவோம் என இரா.சம்பந்தன் மே தினக் கூட்டத்தின் போது உறுதியளித்துள்ளார்.

http://ibctamil.com/news/index/23018