தேசிய பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில் கடந்த அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட புதிய அரசியல் யாப்பு உருவாக்கம் தொடர்பில் அமெரிக்க அதிகாரிகளுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு விளக்கம் அளித்துள்ளது. 

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அமெரிக்க காங்கிரஸ் சபை உறுப்பினரும் ஆசிய மற்றும் பசுபிக் பிராந்தியங்களின் வெளிவிவகார உபகுழுவின் தலைவருமான அமி பேரா இன்று கொழும்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தனை சந்தித்து கலந்துரையாடினார்.

இதன்போது இலங்கையின் சமகால அரசியல் நிலவரம் மற்றும் தேசிய பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில் கடந்த அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட புதிய அரசியல் யாப்பு உருவாக்கம் தொடர்பில் தெளிவுபடுத்தப்பட்டது.

எனினும் தற்போதைய அரசாங்கம் புதிய அரசியல் யாப்பு உருவாக்கத்தினை மாற்றியமைக்க முயற்சிக்கின்றன. பெரும்பான்மை மக்கள் அதிகார பரவலாக்கத்திற்கு அங்கீகாரம் அளிக்கவில்லை எனவும் அத்தகைய சந்தர்ப்பத்தில் மாற்று வழிகளை யோசிக்க வேண்டும் என உண்மைக்கு புறம்பாக அறிக்கைகள் வெளியிடுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 

தொடர்ச்சியாக வந்த அரசாங்கங்கள் இந்த விடயம் தொடர்பில் பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியுள்ளனர். எனினும் அதனை அமுல்படுத்தவில்லை. இந்நிலையில் சர்வதேச சமூகம், இலங்கை அரசாங்கம் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதனை உறுதி செய்ய வேண்டும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

இந்த வாக்குறுதிகள் அனைத்தும் விடுதலைப்புலிகளின் காலத்தில் கொடுக்கப்பட்டவை எனவும் தற்போது விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்டு விட்டார்கள் என்கிற காரணத்தினால் வாக்குறுதிகளில் இருந்து இலங்கை அரசாங்கம் பின்வாங்க முடியாது என்பதனையும், வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமல் இருக்க முடியாது என்பதனையும் இரா.சம்பந்தன் வலியுறுத்தினார்.

உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ளவாறு ஒரு அதிகார பரவலாக்கத்தின் மூலமான அரசியல் தீர்வொன்றினை நாம் எதிர்பார்க்கிறோம் என் வலியுறுத்திய இரா.சம்பந்தன், இலங்கை எனது நாடு இங்கே சம உரிமையுள்ள பிரஜையாக நான் மதிக்கப்பட வேண்டும்.

நியாயமுள்ள அரசியல் தீர்வொன்றினை அடைய முடியாதே போனால் அது பாரிய பின்விளைவுகளை கொண்டுவரும். தமிழ் தலைவர்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை சிங்கள தலைவர்கள் மதிக்காதன் விளைவே விடுதலைப்புலிகளின் உருவாக்கத்திற்கு காரணம் என்பதனையும் சுட்டிக்காட்டினார்.