இலங்கை இராணுவத் தளபதி சவேந்திர சில்வா மற்றும் அவரது குடும்பத்தினர் அமெரிக்காவுக்குள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டமையானது இலங்கைக்கு சர்வதேச அரங்கில் பேரவமானத்தை ஏற்படுத்தியுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாகியுள்ளவர்களுக்கு இலங்கை அரசு உயர் பதவிகளை வழங்கி வைத்திருந்தமை மாபெரும் தவறு. இனியாவது போர்க்குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்.

பாதிக்கப்பட்ட தமிழர்கள் சார்பில் அமெரிக்காவின் இந்தத் தீர்மானத்தை நாம் வரவேற்கின்றோம்.

இறுதிப்போரில் மனித உரிமை மீறல்கள் மீறப்பட்டு போர்க்குற்றங்கள் இழைக்கப்பட்டு தமிழர்கள் சாகடிக்கப்பட்டமைக்குப் பொறுப்புக்கூற வேண்டியவர்களில் இராணுவத்தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வாவும் முக்கியமானவர்.

இந்தநிலையில், அவர் மீதான குற்றச்சாட்டுகள் நம்பகமானவை என்று தெரிவித்துள்ள அமெரிக்கா, அவருக்கான பயணத்தடையையும் விதித்துள்ளது.

அமெரிக்காவின் ஏற்பாட்டில் ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்ட இலங்கை மீதான ஐ.நா. தீர்மானத்தை அரசு மதித்துச் செயற்பட வேண்டும்.

இலங்கை அரசு வெளிநாடுகளையும், ஐ.நா. மனித உரிமைகள் சபையையும் பகைத்து விட்டு தான்தோன்றித்தனமாகச் செயற்பட்டால் பாரிய விளைவுகளை சர்வதேச அரங்கில் சந்திக்க வேண்டி வரும்.

ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இணங்கி ஏற்றுக்கொண்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்த மாட்டோம் என்று இலங்கை அரசு நேற்று முன்தினம் உத்தியோகபூர்வமாக அறிவித்திருந்த நிலையில், இலங்கை இராணுவத் தளபதி சவேந்திர சில்வா மற்றும் அவரது குடும்பத்தினர் அமெரிக்காவுக்குள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Source: https://www.tamilwin.com/politics/01/238904?ref=home-feed