ஐக்கிய தேசிய கட்சியின் ஆட்சிக் காலத்திலேயே யாழில் உள்ள இரு முக்கிய தளங்கள் அழிக்கப்பட்டதாக, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், பிரதமர் ரணில் முன்னிலையில் தெரிவித்துள்ளார்.

எனினும், அதனை மீள அமைப்பது என்பது, இனிமேலும் இதுபோன்ற அழிவுகள் கிடையாது என்பதை இலங்கையில் வாழும் மக்களுக்கு எடுத்துக் கூறும் முக்கிய செய்தியாக அமைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்.மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆர்னோல்ட் தலைமையில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்ற, 1985ஆம் ஆண்டு அழிக்கப்பட்ட யாழ்.மாநகர சபைக்கான புதிய கட்டிடம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

“யாழ்.மாநகர சபை எவ்வாறு அழியப்பட்டதென்பது வரலாற்றில் பதியப்பட வேண்டிய ஒரு விடயம். நூலகம் ஒரு இரவில் தீக்கிரையானது, கடந்த ஐக்கிய தேசிய கட்சியின் ஆட்சியின் போது, பிரதமர் அமைச்சரவையில் இருந்த போது, அவருடைய சகாக்களினால் தீக்கிரையாக்கப்பட்டது.

ஆனால், மாநகர சபையானது, நீண்டகாலமாக, இலங்கை இராணுவத்தினால், அண்மையில் உள்ள கோட்டையில் இருந்து செல் அடித்து தகர்த்தப்பட்டது.

இவ்வாறு அழிக்கப்பட்ட இரு தளங்களையும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் அமைச்சர் சம்பிக்க ரணவக்க ஆகியோர் இணைந்து, மீள அமைப்பது வடபகுதியில் உள்ள அதாவது யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழ் மக்களுக்கு மட்டுமன்றி, இலங்கையில் வாழும் அனைத்து மக்களுக்கு தெரிவிக்கும் ஒரு முக்கியமான செய்தி.

அந்த செய்தி என்னவெனில், இனிமேலும் இந்த சம்பவங்கள் நிகழாது, நாங்களாகவே, எமது கைகளினால் கட்டுகின்றோம் என்பதாகும்.

இவ்வாறான சம்பவங்கள் மீள நிகழாமை இருப்பதற்கு, இந்த நாட்டில், அரசியல் விஸ்திரதன்மை இருக்க வேண்டும். வெறும் பௌதீக அபிவிருத்தி அதனை உறுதிப்படுத்தாது. அதற்கான முன்னெடுப்புக்களும் செய்யப்படுகின்றன. அவை உறுதி செய்யப்படவில்லை. பின்னடிக்காது முன்னெடுக்கப்பட வேண்டும். எமது மக்களினால் கொன்று குவிக்கப்படாத எமது சொத்துக்களை சேதப்படுத்தாதவர்களாக, தமிழ் மக்கள் தனித்து வாழ்வதற்கான அரசியல் அத்திவாரம் போடப்பட வேண்டும். அதனை இந்த முக்கிய தருணத்தில் தமிழ் மக்களின் பிரதிநிதியாக சொல்ல வேண்டிய கட்டாயம் உள்ளது.

யாழ்ப்பாணம் தமிழ் மக்களின் கலாசாரம் எந்தளவிற்கு முக்கியமானதென்பதனை பிரதமர் நன்கு அறிவார். ஆகையினால், இந்தப் பகுதியில் ஏற்படும் அபிவிருத்திப் பணிகளுக்கு, பிரதமர் விசேட முக்கியத்துவம் கொடுப்பதனை மெச்ச வேண்டும். அதற்கு நன்றி செலுத்த வேண்டும்” என கூறினார்.

Source:http://athavannews.com/%e0%ae%90-%e0%ae%a4%e0%af%87-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%87%e0%ae%af%e0%af%87-%e0%ae%af%e0%ae%be%e0%ae%b4/