பலாலி விமான நிலையம் தொடர்பாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற இந்த சந்திப்பின்போது வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் திலக் மாரப்பன மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

மேலும் தமிழ் தேசிய கூட்டமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா மற்றும் எம்.ஏ. சுமந்திரன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது பலாலி விமான நிலையத்தின் அபிவிருத்திப் பணிகள் தொடர்பாக கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

இதேவேளை பலாலி விமான நிலையத்தின் அனைத்து அபிவிருத்திப் பணிகளும் ஒக்டோபர் நடுப்பகுதியில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த பணிகள் முடிந்ததும் குறித்த விமான நிலையத்தில் இருந்து இந்தியாவுக்கு நேரடி விமான சேவைகளையும் சீனா, அவுஸ்ரேலியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமான சேவைகளும் மேற்கொள்ளப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.