தமிழர்களின் பல்வேறுப்பட்ட தேவைகள் குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து கலந்துரையாடவுள்ளது.

அதற்கமைய நாளை மறுதினம் (புதன்கிழமை) முற்பகல் 11 மணியளவில் ஜனாதிபதி செயலகத்தில் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.

காணி விடுவிப்பு, அத்துமீறிய குடியேற்றங்கள், மீள்குடியேற்றம் உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து அன்றைய தினம் ஜனாதிபதியுடன் கலந்துரையாடவுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இதற்கு முன்னர் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கடந்த வெள்ளிக்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து கலந்துரையாடியிருந்தது.

இதன்போது, தொல்பொருள் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம் என்பவற்றால் மக்கள் பாதிக்கப்படுவது தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஜனாதிபதியிடம் எடுத்துரைத்திருந்தது.

அத்தோடு காணிகள் விடுவிக்கப்படாமை மற்றும் பௌத்த தேரர்களால் கன்னியா, நீராவியடி உள்ளிட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுவரும் அத்துமீறல்கள் தொடர்பாகவும் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டிருந்தது.

இதனையடுத்து இந்த பிரச்சினைகள் தொடர்பாக ஆராய்வதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அழைத்து விரிவாக ஆராய்வது என்று ஜனாதிபதி தெரிவித்திருநதமைக்கு அமைவாக எதிர்வரும் புதன்கிழமை கலந்துரையாடல் நடைபெறவுள்ளமையினால் அதில் சம்ந்தப்பட்ட அதிகாரிகளும் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.3

Source: http://athavannews.com/%e0%ae%9c%e0%ae%a9%e0%ae%be%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%9a%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b5%e0%af%81%e0%ae%b3%e0%af%8d/