தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும், உரிமைகளை வென்றெடுக்கவும் தீவிரமாகவே செயற்பட்டுவருவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

அத்துடன், உரிமைகளைப் பெற்று சுதந்திரமாகவும் சுய ஆட்சியுடனும் வாழவேண்டியது எமது பிறப்புரிமை எனவும் அதை எவராலும் மறுக்க முடியாது எனவும் தெரிவித்துள்ள அவர், அதனை அடைவதற்கு தமிழ் மக்கள் தொடர்ந்தும் ஒன்றுபட்டு இருக்கவேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

இலங்கை தமிழரசுக் கட்சியின் மக்கள் சந்திப்பு இன்று (ஞாயிற்றுக்கிழமை) திருகோணமலையில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தெரிவிக்கையில், “தமிழ் மக்களின் ஒற்றுமையின் காரணமாகவே இன்றைக்கு இலங்கையில் ஜனநாயகம் நிலவுகின்றது. நீதிமன்றம் சுயாதினமாக செயற்படுகின்றது. மக்களின் வாக்குறுதிக்கு அமைய நாம் எமது செயற்பாடுகளை பக்குவமாக செயற்படுத்துகின்றோம்.

எனவே மக்கள் ஒற்றுமையாக இருந்து உரிமையை வென்றெடுக்க முன்னெடுக்கும் எமது செயற்பாடுகளுக்கு ஆதரவு தர வேண்டும்.

நாம் தமிழ் மக்களது பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு பல செயற்பாடுகளை முன்னெடுக்கும் போதும் அதனை பத்திரிகைகளுக்கு தெரிவிப்பதில்லை. அவ்வாறு கூறினால் ஆபத்து ஏற்படும். அவ்வாறு கூறினால் சிங்களப் பத்திரிகைகள் வரும், சிங்கள அரசியல்வாதிகள் அதைப் பேசுவார்கள். பிழைகள் ஏற்படும்.

இதேவேளை, இன்று மக்களின் காணிகளில் மூன்றில் இரண்டு பகுதி காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன. ஆனாலும் மிகுதிக் காணிகளும் விடுவிக்கப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு. அதனை விடுவிக்க நாம் தொடர்ந்து செயற்படுகின்றோம்.

அதேபோல் காணாமல் போனவர்கள் விடயத்தில் நாம் மிகுந்த கரிசனையுடன் செயற்படுகின்றோம். காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பாக கட்டாயம் பதில் சொல்லியே ஆக வேண்டும். அவர்கள் சம்பந்தமான உண்மையை சொல்ல வேண்டும்.

அத்துடன், காணாமல் போனோர் அலுவலகம் முன்னர் உருவாக்கப்பட்டது. இப்போது பரிகாரம் சம்பந்தமான அலுவலகம் உருவாக்கப்படவுள்ளது. இரண்டு அலுவலகமும் சேர்ந்து காணாமல் ஆக்கப்பட்டடோரின் உறவுகளுக்கு தமது ஆதரவை வழங்கவேண்டும்.

இதற்கான எமது செயற்பாடுகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக அடுத்துவரும் வாரங்களில் நாமும் எமது செயற்பாடுகளை மும்முரமாக செய்யவுள்ளோம்.

அத்துடன், நாம் எமது கடமைகளிலிருந்து தவறவில்லை. எவருக்கும் நாம் முண்டுகொடுக்கவில்லை.

இந்நிலையில், அடுத்த ஜனாதிபதித் தேர்தலுக்கான வேலைப்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஜனாதிபதி வேட்பாளர்கள் குறித்து பிராதான கட்சிகளுக்குள் குழப்பம் நிலவுகின்றது.

இந்தக் குழப்பங்கள் முடிவடைந்து கட்சி வேட்பாளர்களின் அறிவிப்பின் பின்னர் நாம் எமது ஆதரவு தொடர்பாக தெரிவிப்போம்” என அவர் தெரிவித்துள்ளார்.

Source: http://athavannews.com/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%af%80%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%ae%e0%ae%be%e0%ae%95-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%ae%bf/