முல்லைத்தீவு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராசாவுக்கும் இடையிலான  சந்திப்பு ஒன்று  இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பு, முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு அண்மையில் உள்ள தனியார் மண்டபம் ஒன்றில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்றது.

இதில் 50 இற்கும் மேற்பட்ட வேலையற்ற பட்டதாரிகள் கலந்துகொண்டனர்.

இந்த சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா, “முல்லைத்தீவு மாவட்டத்தின் வேலையற்ற பட்டதாரிகள் என்னோடு ஒரு சந்திப்பினை மேற்கொண்டிருந்தனர்.

இவர்கள் மாவட்டத்தின் பிரதேச செயலகம் மற்றும் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற நேர்முகத் தேர்வுகளில் பங்குபற்றியும் வேலை கிடைக்காதவர்கள். முல்லைத்தீவு மாவட்டத்திலே 58பேர் இவ்வாறாக தகுதியிருந்தும் வேலை கிடைக்காதவர்களாக இருக்கின்றனர்.

வடக்கு கிழக்குப் பல்கலைக் கழகங்களைப் பொறுத்தவரையில் 2017ஆம் ஆண்டு தங்களது பட்டப் படிப்பினை முடித்தும் இவர்கள் வேலை கிடைக்காதவர்களாக இருக்கின்றனர்.

ஆனால் ஏனைய பல்கலைக்கழகங்களில் இதே ஆண்டு பட்டப்படிப்பினை முடித்தவர்களுக்கு நியமனம் வழங்கப்படுகின்ற வேளையில், வடக்கு கிழக்கு பல்கலைக்கழகங்களில் ஒவ்வொரு வருடமும் பிந்திய கற்கை நெறிகள் ஆரம்பிக்கப்படுவதனால் இந்தப் பட்டதாரிகள் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

எனவே ஏனைய பிற மாகாணங்களோடு ஒப்பிடாது, வடக்கு கிழக்கில் 2017ஆம் ஆண்டு தமது கற்கைகளை முடிவுறுத்திய பட்டதாரிகளை விசேடமாக கவனத்திற் கொள்ளவேண்டும்.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள், அமைச்சு மட்டத்திலே இது தொடர்பாக நாமும் குரல் கொடுப்பதற்குத் தயாராக இருக்கின்றோம்.

இந்தப் பட்டதாரிகளை விசேடமாகக் கவனத்திற்கொண்டு ஏனைய மாகாணங்களில் உள்வாங்கப்படுவதனைப் போல் 2017ஆம் ஆண்டு கற்கைநெறிகளை முடித்த பட்டதாரிகளை உள்வாங்கும் அதேவேளை, வடக்குக் கிழக்கு மாகாணங்கள் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மாகாணங்கள் என்ற வகையில் 2018ஆம் ஆண்டு தமது கற்கை நெறிகளை முடித்து வேலைக்காக காத்திருக்கின்ற பட்டதாரிகளையும் உள்வாங்குவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Source: http://athavannews.com/%e0%ae%a4%e0%af%8a%e0%ae%9f%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae/