இலங்கை அரசாங்கம் பொறுப்புக்கூறலைச் செய்வதற்காக சர்வதேச மேற்பார்வைக்கான கால எல்லையை அடுத்த இரண்டு வருடங்கள் நீடித்து பிரித்தானியா தலைமையில் கொண்டுவரப்பட்ட பிரேரணை நிறைவேற்றப்பட்டமையானது தமிழ் மக்களுக்கு கிடைத்த வெற்றியாகும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும், இலங்கை தமிழரசுக்கட்சியின் வெளிவிவகாரங்களுக்கான செயலாளரும், யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் வீரகேசரிக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியில் தெரிவித்தார்.

ஜெனீவா மனித உரிமைகள் பேரவையின் 40 ஆவது கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காகச் சென்றிருந்த அவர் நாடு திரும்பியதும் வழங்கிய  அச்செவ்வியின் முழுவடிவம் வருமாறு,

கேள்வி :- ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 40ஆவது கூட்டத்தொடரில் பங்கேற்பதற்கு தாங்கள் திடீரென சென்றிருந்ததேன்?

பதில்:- ஜெனீவா அமர்வுகள் ஆரம்பமாவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்னதாக எமது நிலைப்பாடுகளை அறிந்துகொள்வதற்காக உறுப்புநாடுகள் எம்முடன் கலந்துரையாடுவதற்காக அழைப்பு விடுவதுண்டு. 2015 மற்றும் 2017ஆம் ஆண்டுகளில் நான் அங்கு விஜயம் செய்து கலந்துரையாடல்களில் பங்கேற்றிருந்தேன். இம்முறை இலங்கை அரசாங்கம் இணை அனுசரணை வழங்குவதாக மார்ச் மாதம் ஐந்தாம் திகதி ஜெனீவாவுக்கான இலங்கை வதிவிடப்பிரதிநிதி இணக்கத்தினை தெரிவித்து கையொப்பம் இட்டிருந்தமையால் அங்கு விஜயம் செய்வதில்லை என்ற முடிவிலிருந்தேன். இருப்பினும் அரச தூதுக்குழுவில் ஜனாதிபதியின் சார்பில் நியமிக்கப்பட்ட உறுப்பினர்கள் பிரேரணையில் மாற்றங்களை ஏற்படுத்த முனைகின்றார்கள் என்ற செய்தி கிடைத்தமையால் தான் திடீரென அங்கு செல்லவேண்டி ஏற்பட்டது. அங்கு இரண்டு நாட்கள் தங்கியிருந்து எமது நிலைப்பாட்டினை தெளிவாக எடுத்துரைத்திருந்தேன்.

கேள்வி:- ஜெனீவா சென்றிருந்த நீங்கள் எத்தகைய சந்திப்புக்களில் ஈடுபட்டீர்கள்?

பதில்:- 18 ஆம் திகதி திங்கட்கிழமை 28 உறுப்பு நாடுகளுடனான சந்திப்பு இடம்பெற்றது. இதன்போது பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்பில் எமது நிலைப்பாட்டினை உறுப்பு நாடுகளிடத்தில் தெளிவாக எடுத்துக்கூறி உரையொன்றை ஆற்றியிருந்தேன். ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளருடன் உத்தியோக பூர்வமாக சந்திப்பதற்கு நேர ஒதுக்கீடு கிடைக்காதபோதும் அவரை பிரத்தியேகமாக சந்திப்பதற்கு வாய்ப்பு கிட்டியிருந்தது. அதனைவிடவும் ஆணையாளரின் அலுவலகத்தினைச் சேர்ந்த முக்கியஸ்தர்களை சந்தித்து கலந்துரையாடல்களைச் செய்திருந்தேன்.

கேள்வி;:- இலங்கை அரசாங்கத்தின் பொறுப்புக்கூறல் செயற்பாடுகள் தொடர்பில் விமர்சனங்களைக் கொண்டிருக்கின்ற நீங்கள் இந்த சந்திப்பின்போது அதுபற்றி தெளிவுபடுத்தினீர்களா?

பதில்:- ஆம், இம்முறை மட்டுமல்ல கடந்த காலத்திலும் அவ்விடயத்தினை எடுத்துக்கூறியுள்ளேன். இலங்கை அரசாங்கம் வாக்குறுதிகளை வழங்குகின்றது. ஆனால் அவற்றை செயற்பாட்டு ரீதியாக முன்னெடுப்பதில் பின்னடைவுகள் இருக்கின்றன. அரசாங்கம் இழுத்தடிப்புக்களை தொடர்ந்தும் செய்கின்றது. ஆகவே கால அட்டவணையொன்று வழங்கப்படவேண்டும் என கோரியிருந்தேன். அதன்பிரகாரம், இம்முறை நிறைவேற்றப்பட்ட 40/1பிரேரணையில் கால அட்டவணையின் அடிப்படையில் பொறுப்புக்கூறல் விடயங்கள் நிறைவேற்றப்பட வேண்டும் என்று முதற்தடவையாக கூறப்பட்டுள்ளது.

பிரேரணையில் கூறுவதற்கு மேலதிக கால அட்டவனையொன்றை தயாரித்து நிறைவேற்றப்பட்ட பிரேரணையில் பின்னிணைப்பாக இணைத்துக்கொள்ள வேண்டும் என்றும் கோரியிருந்தேன். இருப்பினும் பிரேரணையில் பின்னிணைப்பாக கால அட்டவனையை இணைக்க முடியாதுள்ளதாக சர்வதேச தரப்பினர் கூறினாலும் இலங்கையின் இணை அனுசரணையுடன் பிரேரணை நிறைவேறியதும் மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கை அரசாங்கத்தரப்பினருடன் இணைந்து கால அட்டவனையை தயாரிப்பது தான் முதற்பணியாக இருக்கும் என்று என்னிடத்தில் உறுதியளித்துள்ளார்கள்.

கேள்வி:- இலங்கை அரசாங்கத்தின் இணை அனுசரணையுடன் பிரேரணை நிறைவேற்றப்பட்டமையை எப்படிப் பார்க்கின்றீர்கள்?

பதில்:- அரசாங்கம் பொறுப்புக்கூறல் விடயத்தில் மந்தமாக செயற்பட்டதன் காரணமாக பாதிக்கப்பட்ட தரப்பான தமிழ் மக்கள் விரக்தியுற்றிருக்கின்றார்கள் என்பது யாதார்த்தமான விடயம். ஆனால் இலங்கை அரசாங்கத்தின் அனுசரணையுடன் தற்போதைய பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளமையானது தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் மிகப் பெரியவெற்றியாகும். காலஅவகாசம் வழங்கப்படுகின்றது என்ற பிரசாரத்தினை முறியடித்து இப்பிரேரணையை நிறைவேற்றியமை கூட்டமைப்புக்கும் கிடைத்த வெற்றியாக கருதமுடியும். தற்போது மக்கள் அதனை விளங்கிக் கொள்ளாது விட்டாலும் இந்தப் பிரேரணையால் என்ன நன்மை என்று அங்கலாயத்;தாலும் அதன் பலாபலன்கள் காலவோட்டத்தில் தெரியவரும்.

கேள்வி:- பிரித்தானிய தலைமையில் கொண்டுவரப்பட்டுள்ள பிரேரணைக்கு இணை அனுசரணை வழங்குவது குறித்து இலங்கை அரசாங்கத்துக்கும் கூட்டமைப்புக்கும் இடையில் பேச்சுக்கள் நடத்தப்பட்டதா?

பதில்:- ஆம், கடந்த டிசம்பர் மாதத்தில் பிரதமராக மீண்டும் ரணில் விக்கிரமசிங்க பதவியேற்பது குறித்து ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்களுடன் பேச்சுக்களை நடத்தியபோது நாங்கள் முன்வைத்த நிபந்தனைகளில் இரண்டாவதாக ஜெனீவா விடயமே காணப்பட்டது. முதலாவதாக புதிய அரசியலமைப்புக்கான இறுதி வரைவு கடந்த சுதந்திரதினத்திற்கு முன்னதாக கொண்டுவரப்பட வேண்டும் என்றும் இரண்டாவதாக ஜெனீவாவில் இலங்கை அரசாங்கம் இணை அனுசரணை வழங்கிய 30.1தீர்மானம் முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் கோரியிருந்தோம். அதனை அவர்கள் ஏற்றிருந்தார்கள். இணை அனுசரணை வழங்கிய இலங்கை அரசாங்கம் அதற்கு செயல்வடிவம் கொடுத்துள்ளனர்.

கேள்வி:- தற்போதுள்ள அரசியல் சூழலில் அரசாங்கத்தரப்பினர் பொறுப்புக்கூறல் விடயங்களை முன்னெடுப்பார்கள் என்ற நம்பிக்கையைக் கொண்டிருக்கின்றீர்களா?

பதில்:- நம்பிக்கை என்பதற்கு அப்பால், ஆணையாளரின் அறிக்கையை எதிர்த்து ஐ.நா அரங்கத்தில் வெளிவிவகார அமைச்சர் கருத்துக்களை கூறினாலும் ஐ.நா.வின் 30ஃ1 தீர்மானத்தினை நடைமுறைப்படுத்வோம் என்று அரசாங்கம் சர்வதேசத்திற்கு வாக்குறுதி அளித்தே நிறைவேற்றப்பட்ட 40/1பிரேரணைக்கு இணை அனுசரணை வழங்கியுள்ளது. இதன்மூலம் இலங்கை அரசாங்கம் மூன்றாவது தடவையாக எழுத்துமூலமாக சர்வதேசத்திற்கு வாக்குறுதி அளித்துள்ளது. 30/1பிரேரணையில் இலங்கையில் இடம்பெற்ற விடயங்கள் தொடர்பில் சர்வதேச நீதிபதிகள், சட்டத்தரணிகளின் பங்குபற்றுதலுடன் நீதி விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. இவ்விடயங்கள் உள்ளிட்டவற்றையே மூன்றாவது தடவையாகவும் அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளது. ஆகவே ஏற்றுக்கொண்ட விடயங்களை நடைமுறைச் சாத்தியமாக்க வேண்டிய பொறுப்பு சர்வதேசத்திற்கே உள்ளது.

கேள்வி:- கடந்த காலத்தினைப்போன்றே அரசாங்கம் பொறுப்புக்கூறல் செயற்பாடுகளை தட்டிக்கழிக்கும் வகையில் செயற்பாட்டால் அதன்மீது சர்வதேசத்தின் “பிடி” எவ்வாறு இருக்கும்?

பதில்:- ஜெனீவா பொறிமுறையை மையப்படுத்திப் பார்க்கையில், இதற்கு மேல் சர்வதேசத்தினால் இலங்கை மீது “பிடி”யை வைத்திருப்பதற்கு வேறு வழிகள் இல்லை. சுர்வதேச நாடுகளால் இவ்வாறான தீர்மானங்களை மட்டுமெ நிறைவேற்ற முடியும். அவ்வாறு நிறைவேற்றும் தீர்மானங்களை மையமாகக் கொண்டு இலங்கை அரசாங்கத்திற்கு சில உதவிகளையும் ஒத்துழைப்புக்களையும் நல்கி பொறுப்புக்கூறலை நிறைவேற்றுவதற்காக ஊக்குவிப்பார்கள். அதற்கு மேலாக வேறெதனையும் ஜெனீவா பொறிமுறை ஊடாக எதிர்பார்க்க முடியாது. ஜெனீவாவில் வாக்குறுதி அளித்த விடயங்களை அரசாங்கம் செய்யத்தவறினால் உடனடியாக பாரிய பின்விளைவுகள் ஏற்படும் என்று கூறமுடியாது. தொடர்ச்சியாக அவ்வாறு நடந்து கொள்வார்களாயின் பின்விளைவுகளைச் சந்திக்க வேண்டியேற்படும். பொறுப்புக்கூறவில்லை என்பதற்காக நீதிமன்றப்பொறிமுறை ஊடாக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் போன்ற விடயங்கள் இடம்பெறாது.

ஆனால் வெவ்வேறுபட்ட விடயங்களில், உதாரணமாக இருதரப்பு உறவுகள், வர்த்தகம் போன்றவற்றில் பாதிப்புக்கள் ஏற்படலாம். தற்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதியைப் பெற்றுக்கொள்வதற்காக இருக்ககூடிய ஒரேயொரு பொறிமுறை இது தான். இதனையும் கைவிட்டுவிடக்கூடாது என்பதே எமது நிலைப்பாடாக இருக்கின்றது.

கேள்வி:- இந்;த ஜெனீவா கூட்டத்தொடரில் இலங்கைக்கு கால அவகாசம் வழங்கக் கூடாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகள் உட்பட தமிழ்த் தரப்புக்கள் கோருகின்ற நிலையில் இலங்கைக்கு கால அவகாசம் வழங்கப்படவில்லை சர்வதேச மேற்பார்வைக்கான கால எல்லையே நீடிக்கப்பட்டுள்ளது என்று நீங்கள் வாதிடுகின்றீர்களே?

பதில்:- தற்போதைய பிரேரணை நிறைவேற்றப்படாது விட்டிருந்தால் பொறுப்புக்கூறல் விடயத்தில் இலங்கையை கையாள்வதற்கு எவ்விதமான பிடிமானங்களும் சர்வதேசத்திடம் இருந்திருக்காது. இதனை நாங்கள் உள்ளிட்ட அனைத்து தமிழ்த் தரப்புக்களும் உணர்ந்துள்ளோம். கால அவகாசம் வழங்கப்படக்கூடாது என்று மக்கள் மத்தியில் கூறும் தரப்புக்கள் ஜெனீவாவுக்குச் சென்று அங்கு நிறைவேற்றப்பட்ட பிரேரணையை திருத்தங்களின்றி முன்னகர்த்துவதற்கு தங்களது பணத்தையும், நேரத்தையும் விரயம் செய்து கடுமையாக உழைத்திருந்தன. ஆகவே இந்தப் பிரேரணை நிறைவேற்றப்படாது விட்டிருந்தால் அடுத்து எதுவுமே இல்லை என்பதை அவர்கள் நன்றாகவே உணர்ந்துள்ளார்கள். அவ்வாறிருக்கையில் எதற்காக பொய்யான பிரசாரம் செய்கின்றார்கள் என்பது எனக்கு தெரியாது.

தற்போது கூட சிவசக்தி ஆனந்தன் எம்.பி கூட்டமைப்பு புதுக்கதை கூறுவதாக தெரிவிக்கின்றார். நாங்கள் புதுக்கதை கூறவில்லை. 2017ஆம் ஆண்டு 34/1தீர்மானம் நிறைவேற்றப்படுகின்றபோது வவுனியாவில் ஒருநாள் முழுவதும் ஆராய்ந்து நாங்கள் இத்தகையதொரு தீர்மானத்தினையே எடுத்திருந்தோம். அன்றும் சிவசக்தி ஆனந்தன் தான் அதற்கு மாறாக இருந்தார். ஏனைய கட்சிகள் இணங்கியிருந்தன. அவ்வாறிருக்க இம்முறையும் இந்த விடயம் சம்பந்தமாக சம்பந்தன் ஐயாவின் கொழும்பு இல்லத்தில் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழு கூடி ஆராய்ந்திருந்தது. இதன்போது, சர்வதேசத்தின் மேற்பார்வைக்கான கால அவகாசம் வழங்கப்பட வேண்டும் என்று தான் தீர்மானம் உத்தியோகபூர்வமாக எடுக்கப்பட்டது.

அப்படியிருந்தும், பொதுவெளியில் கால அவகாசம் என்ற சொல்லை பயன்படுத்தி மக்களை பிழையா வழிநடத்தி கோஷங்களை எழுப்பியபோது அரசியல்வாதிகளும் வேறுநிலைப்பாட்டுடன் இருக்கின்றோம் என்ற நிலை ஏற்பட்டு விடும் அச்சத்தின் காரணமாக கால நீடிப்பு வேண்டாம் என்று குரல் கொடுத்துள்ளனர். உண்மையை அறிந்திருந்தும் எங்களுடைய கட்சியின் உறுப்பினர்களும் சரி, பங்காளிக் கட்சிகளும் சரி அனைவருமே அரசியல் சுயலாபத்துக்காக கோமாளித்தனமாக செயற்பட்டமையை காணமுடிந்தது.

கேள்வி:- கூட்டமைப்பாக ஏகதீர்மானம் எடுக்கப்பட்டால் இவ்வாறான நிலைமைகளை தவிர்த்திருக்க முடியுமல்லவா?, இதுகுறித்து எதிர்காலத்தில் பேசப்படுமா?

பதில்:- கூட்டமைப்பாக நாங்கள் கலந்துரையாடி தீர்மானங்களை எடுக்கின்றபோது அனைவரும் இணங்குகின்றார்கள். பின்னர் நேரெதிராக செயற்படுகின்றார்கள். கூட்டமைப்புக்குள் இது குறித்து பேசவேண்டிய நிலைமைகள், தேவைகள் ஏற்படுமாயின் கலந்துரையாடுவோம்.

கேள்வி:- இலங்கையை பாதுகாப்புச் சபை ஊடாக குற்றவியல் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்வதற்கான வாய்ப்புக்கள் இருக்கின்றனவா?

பதில்:- எமது நிலைப்பாடும் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்த வேண்டும் என்பது தான். அதற்கு உடனடியாகச் சாத்தியமில்லை. ஆகவே அதற்கான வழிமுறைகள் தொடர்பில் ஆராய வேண்டியுள்ளது. அந்தச் செயற்பாட்டினை முன்னெடுப்பதற்கும் நாங்கள் தயாராகவே உள்ளோம். ஜெனீவாவில் கடந்த செவ்வாய்க்கிழமையன்று இந்த விடயம் சம்பந்தமாக அனைத்து தமிழ்த் தரப்புக்களும் ஒன்றாகக் கூடி ஆராய்ந்திருந்தோம். குறிப்பாக, சர்வதேச சட்ட நிபுணர்களின் பங்கேற்புடன் இலங்கையை குற்றவியல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்துவதற்குரிய ஏதாவது வழியொன்று உள்ளதா என்பது தொடர்பில் ஆராய்ந்து அவ்வாறு இருக்குமாயின் அதுகுறித்த அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று அந்த கூட்டத்தில் நான் குறிப்பிட்டுள்ளேன். எனினும் அந்த செயற்பாடுகள் உடனடியாகச் சாத்தியமில்லாத நிலையில் தற்போதிருக்கின்ற சர்வதேச மேற்பார்வை பொறிமுறையை இழந்து விடாது தொடர்ந்து கொண்டு செல்ல வேண்டியுள்ளது.

கேள்வி:- வடக்கிலும் கிழக்கிலும் பாதிக்கப்பட்ட மக்கள் கால அவகாசம் வழங்கக் கூடாது என்று போராட்டங்களை முன்னெடுத்தபோதும் அவர்களின் நிலைப்பாடுகளுக்கு அப்பால் தங்களின் தலையீட்டினால் தான் மேற்பார்வைக்கான கால எல்லை அதிகரிக்கப்பட்டுள்ளது என்று நேரடியாகவே சுட்டப்படுகின்றதல்லவா?

பதில்:- சர்வதேச மேற்பார்வைக்கான கால எல்லை நீடிப்பு என்னுடைய தலையீட்டினாலே நடைபெற்றிருக்கின்றது என்று கூறப்படுமாயின் அது எனக்கு வழங்கப்படும் மிகப்பெரும் புகழாரமாகவே கருதுகின்றேன். பாதிக்கப்பட்ட மக்களுக்காக கட்டாயம் செய்யப்பட்டிருக்க வேண்டிய விடயமொன்றை செய்தமைக்கான பொறுப்பினை என்னுடைய தலையில் சுமத்துவார்களாயின் நான் அதனை தாராளமாக ஏற்றுக்கொள்கின்றேன். கால அவகாசம் என்ற தவறான சொற்பதத்தினை பயன்படுத்தி அது நீடிக்க கூடாது என்று பாதிக்கப்பட்ட மக்களை திசைதிருப்பியவர்கள் அந்த மக்களின் நலனை முன்னிலைப்படுத்தி செயற்பட்டிருக்கவில்லை. அவர்கள் மக்கள் மத்தியில் தவறாக பிரசாரம் செய்து அவர்களை போராட்டம் வரை அழைத்து வந்துவிட்டார்கள். மக்களுக்கு உண்மையை கூறவில்லை. தற்போது நிறைவேற்றப்பட்டுள்ள பிரேரணையானது இலங்கை அரசாங்கத்தின் இணை அனுசரணையுடன் தான் நிறைவேறியுள்ளது. அவ்வாறு இணை அனுசரணையின்றி பேரவையில் பிரேரணையை நிறைவேற்ற முடியாது. ஆகவே அதனையும் பாதிக்கப்பட்ட மக்கள் கவனத்தில் கொள்ளவேண்டியுள்ளது. 

கேள்வி:- போர்க்குற்றங்கள், வலிந்து காணமலாக்கப்பட்டமை தொடர்பாக அரச தலைவர்கள் படைவீரர்களை தண்டிக்க மாட்டோம் என்று கூறுகின்றபோது பொறுப்புக்கூறல் சாத்தியமாகுமா?

பதில்:- யுத்தத்தில் பங்கெடுத்த படைவீரர்களின் குடும்பத்தினரே தென்னிலங்கை அரச தலைவர்களின் வாக்கு வங்கியாக இருக்கின்றது. ஆகவே தங்களது வாக்கு வங்கியை தக்கவைப்பதற்காக பல கருத்துக்களை கூறுவார்கள்.

அரசதலைவர்கள் அவ்வாறு கூறிவிட்டார்கள் என்பதற்காக அரசாங்கத்தினை நம்பமுடியாது நாங்கள் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்குச் செல்கின்றோம் என்று தடாலடியாகக் கூறிவிட முடியாது. அரசாங்கத்தின் பொறுப்புக்கூறும் செயற்பாடுகளில் கால தாமதம் இருக்கின்றது. ஆனால் காணமல்போனவர்கள் பற்றி அலுவலகம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. அவர்கள் பயணிக்கும் இலக்குசரியாக உள்ளது. மறுபக்கத்தில் 11மாணவர்கள் கடத்தல் விவகாரத்தில் கடற்படைத்தளபதியிடம் விசாரணை நடத்தப்படுகின்றது. இவை தொடர்ந்து முன்னெடுக்கப்படுகின்ற போது திருகோணமலை இரகசிய முகாம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் வெளியாகும்.

ஆகவே மெதுவாக நடைபெற்று வரும் விடயங்களை உந்தித்தள்ளுவதற்கே நாம் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டும். அதனை விடுத்து அரசத் தலைவர்கள் இவ்வாறு கூறிவிட்டார்கள் என்று நாம் முடிவுகளை எடுத்தால் அரசாங்கம் தமிழ்த் தரப்பே பொறுப்புக்கூறல் விடயத்தினை கோரவில்லை என்று சர்வதேசத்திடம் சென்று கூறி முழுமையாக தப்பித்து விடும். நாங்கள் பல்வேறு பிரயத்தனத்தின் மத்தியில் சர்வதேசத்தின் அழுத்தங்களை பிரயோகிக்கும் செயற்றிட்டங்களை படிப்படியாக அமுலாக்குவதற்கு முனைந்து கொண்டு இருக்கையில் பல்வேறு தமிழ் தரப்புக்கள் நடைபெறும் விடயங்களுக்கு எல்லாம் எதிர்ப்புக் கோஷங்களை எழுப்புவதன் ஊடாக அரசாங்கம் தப்பிப் பிழைப்பதற்கே முன்னின்று உழைக்கின்றன. இதுவே தமிழ் மக்களுக்கு இழைக்கப்படுகின்ற துரோகமாகும்.

(நேர்காணல்:- ஆர்.ராம்)

Source: http://www.virakesari.lk/article/52561