புலம்பெயர்ந்து இந்தியாவில் வாழும் இலங்கையர்களை, தாய்நாட்டிற்கு அழைத்து வருவதற்கான செயற்பாடுகளை, பிரதமர் ரணில் விக்ரமசிங்க மேற்கொள்ள வேண்டுமென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் குழுக்களின் பிரதித் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் கோரிக்கை விடுத்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்றுவரும் வரவு செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய அவர் இக்கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

அவ்வாறு அழைத்து வருவோருக்கு வீடமைப்பு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதோடு, வீடுகளுடன் காணிகள், வேளாண்மை அடங்கிய ஒரு திட்டத்தை அறிவிக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார்.

அத்தோடு, அவர்கள் தாம் விரும்புகின்ற பொருட்களை கொண்டுவர வாய்ப்பு வழங்க வேண்டும். விமானங்களில் வந்தால் அவ்வாறு கொண்டுவரமுடியாது. ஆகவே கப்பல் சேவையூடாக அவர்கள் தமது பொருட்களை கொண்டுவருவதற்காக, இந்தியாவுடன் பிரதமர்  பேசி அதற்கான வாய்ப்பை பெற்றுக்கொடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தார்.

இதேவேளை, வடக்கு கிழக்கு மக்களின் அன்றாட பிரச்சினைகளை தீர்ப்பதற்கான செயலணியின் ஊடாக அவர்கள் கண்காணிக்கப்பட்டு அடிப்படை தேவைகளை பூர்த்திசெய்வதுடன், அரசியல் தீர்வினையும் பெற்றுத்தர வேண்டுமென வலியுறுத்தினார்.

Source:http://athavannews.com/%e0%ae%aa%e0%af%81%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%86%e0%ae%af%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%88-%e0%ae%85%e0%ae%b4%e0%af%88/