பதவியில் தொடர்ந்தும் நீடிக்க வேண்டுமென்ற கனவில், ஜனாதிபதி செயற்படுவதாலேயே அவரின் போக்கு மாறிவிட்டதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் ஊடகப் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு வாகரையில் நேற்று (சனிக்கிழமை) மாலை இடம்பெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பொங்கல் விழாவில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர், “அரசியலமைப்பு சாத்தியமில்லை என ஜனாதிபதி கூறுவதை ஏற்று நடக்கமுடியாது. அவர் நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை மறந்து செயற்பட்டாலும் நாங்கள் அதனைக் கைவிடப்போவதில்லை.

அதிகாரத்தைப் பகிர்ந்து வழங்குமாறு கூறுகின்றோம். அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்படுகின்றபோது, முழு நாட்டிலும் எண்ணிக்கையில் சிறுபான்மையினராக இருந்தாலும்கூட வெவ்வேறு இடங்களில் நாங்கள் பெரும்பான்மைப் பலத்தை வைத்து, தீர்மானத்தை எடுக்கக் கூடியதாகவிருக்கும்.  அப்டியானதொரு ஆட்சி முறைக்கு மாற்றுமாறே நாங்கள் கேட்டுக்கொண்டிருக்கின்றோம்.

ஜனாதிபதி தேர்தலிலே வெற்றி பெற்ற போது அதனை தீர்மானிக்கும் சக்தியாக இருந்தவர்கள் யார் என்பதை அவர் மறந்துவிட்டார்.

ஜனாதிபதி தன்னுடைய முழு நாட்டுக்கும் கொடுத்த வாக்குறுதியை மறந்து செயற்பட்டாலும் கூட நாங்கள் அதனைக் கைவிடப்போவதில்லை” என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Source:http://athavannews.com/%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%bf-%e0%ae%86%e0%ae%9a%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9c%e0%ae%a9%e0%ae%be%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9/