புதிய அரசியலமைப்பு குறித்து ஜெனீவா மனித உரிமை பேரவையின் கவனத்திற்கு கொண்டுசெல்லவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குறிப்பிட்டுள்ளது.

பொறுப்புக்கூறல் விடயத்திற்கு மேலதிகமாக, புதிய அரசியலமைப்பு தொடர்பான விடயங்களை இணைத்து அதற்கான சர்வதேச மேற்பார்வை கொண்டுவரப்பட வேண்டும் என்று ஜெனீவா அமர்வில் கோரவுள்ளதாக, கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

ஜெனீவா அமர்வு, அதற்கான ஏற்பாடுகள் குறித்து ஆதவன் செய்திப்பிரிவுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே, அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

மேலும், பொறுப்புக்கூறல் விடயத்தில் அரசாங்கம் இழுத்தடிக்கும் விடயங்களை குறுகிய காலத்தில் செய்வதற்கான பொறிமுறையையும் கேட்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இதனிடையே, ஏற்கனவே நாடுகளின் பிரதிநிதிகளுடன் பேச ஆரம்பித்துள்ளதாக தெரிவித்த அவர், வரும் வாரமும் கொழும்பில் ஒரு சந்திப்பு நடைபெறவுள்ளதாகவும் கூறினார். விரைவில் ஜெனிவாகுக்குச் சென்று ஏனைய உறுப்பு நாடுகளுடனும் பேசவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

Source: http://athavannews.com/%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%ae%ae%e0%af%88%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%af%e0%ae%a4/