சொந்த நிலங்களில் குடியேற முடியாமலும், குடியேறிய நிலங்களில் பயிர்செய்ய முடியாமலும் உள்ள தமிழ் மக்களின் துயரங்கள் நீங்க வேண்டும் என இறைவனை பிரார்த்திப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் விடுத்துள்ள பொங்கல் வாழ்த்து செய்தியிலேயே இதனை தெரிவித்துள்ளார்.

மனித வாழ்வின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்கான இயற்கை வளங்களை அருளும் சூரிய பகவானுக்கு நன்றி செலுத்தும் இந்த உழவர் தின திருநாளில் தமது சொந்த நிலங்களில் குடியேற முடியாமலும் குடியேறிய நிலங்களில் பயிர்செய்ய முடியாமலும் உள்ள தமிழ் மக்களின் துயரங்கள் நீங்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சமத்துவம் மற்றும் நீதியின் அடிப்படையில் உருவாகும் ஒரு நியாயமான அரசியல் தீர்வின் ஊடாக மக்களின் எதிர்காலம் வளமடைய பிரார்த்திப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மக்களின் நிலங்கள் அதிக விளைச்சலையும் செழிப்பையும் தந்து மக்கள் தன்னிறைவுள்ள சமூகமாக மீண்டெழ இறைவனை பிரார்த்திப்பதாகவும் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

அதேவேளை தை பிறந்தால் வழி பிறக்கும்’ என்ற தமிழ் மக்களின் நம்பிக்கைக்கு அமைய மலர்ந்திருக்கும் புத்தாண்டு தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்கள் நிறைவேற வழிவகுக்கும் ஆண்டாக அமைய வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

பால் பொங்கி வழிவதைப் போல் அனைவரது உள்ளங்களிலும் அன்பும் மகிழ்ச்சியும் பெருகி நல்லிணக்கம் ஏற்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்புடனேயே தமிழ் மக்கள் பொங்கி மகிழ்கின்றனர்.

எனவே பல இனஇ மதஇ கலாசார சமூகத்தைக் கொண்ட எமது நாட்டின் கலாசார பன்மைத்துவத்தின் செழுமைக்கு இத்தகைய பண்டிகைகள் சிறந்த வாய்ப்பாக அமைவதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இயற்கைக்கும் மனிதனுக்கும் இடையிலான வலிமையான உறவினை மென்மேலும் மெருகூட்டும் வகையிலும் தமிழ் கலை, கலாசாரத்தினை வெளிப்படுத்தும் வகையிலும் தைத்திருநாளைக் கொண்டாடி மகிழும் இலங்கைவாழ் தமிழ் மக்களுக்கும் உலகெங்கிலும் வாழும் தமிழர்களுக்கும் தைத்திருநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்..

இந்நிலையில் இன, மத அடிப்படைவாத சக்திகளைத் தோற்கடித்து ஜனநாயகத்தை வெற்றிபெறச் செய்துள்ள சந்தர்ப்பத்தில் இந்த ஆண்டு தைப்பொங்கல் பண்டிகையைக் கொண்டாடக் கிடைத்தமை மகிழ்ச்சியான விடயமாகும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

தைப்பொங்கல் பண்டிகை அனைத்துச் சம்பிரதாயங்களும் மனிதனுக்கும் இயற்கைக்குமிடையிலான சகவாழ்வினை அர்த்தமுள்ளதாக மாற்றியமைப்பதுடன் மனித சமூகத்தில் அமைதி, மகிழ்ச்சி, செழிப்பினை நோக்கமாகக் கொண்டு அவை நிறைவேற்றப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் மக்களுக்குமாத்திரமன்றி முழு உலகமக்களுக்கும் சமத்துவம் மற்றும் நன்றிக்கடன் செலுத்துவதன் முக்கியத்துவத்தை எடுத்தியம்பும் முக்கிய சந்தர்ப்பமாகும் எனவும் அவர் கூறியுள்ளார்.

பல்வேறுபட்ட சமூகங்களின் சமய, கலாசார உரிமைகளுக்கு மதிப்பளித்து ஒற்றுமையாக வாழ்வதன் பெறுமதியை வலியுறுத்துவதுடன் தைப்பொங்கல் பண்டிகையைக் கொண்டாடும் அனைத்து சகோதர தமிழ் மக்களுக்கும் தனது உளப்பூர்வமான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை அனைவரும் ஒற்றுமையாக வாழும் அரசியல் தீர்வை நாட்டு மக்கள் பெற்றிட இதயச்சுத்தியுடன் பிரார்த்திப்பதாக எதிர்க்கட்சித்தலைவர் மஹிந்த ராஜபக்‌ச தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித்தலைவர் மஹிந்த ராஜபக்‌ஷ விடுத்துள்ள பொங்கல் வாழ்த்துச் செய்தியில் இதனை தெரிவித்துள்ளார்.

தைத்திருநாள் உழவர் பெருநாள் மட்டுமன்றி ‘நன்றியறிதல்’ எனும் உயரிய மனப்பாங்கை வெளிப்படுத்துவதுமாகும்.

இது தமிழ் மக்கள் உலகிற்கு எடுத்துரைக்கும் நலன்மிகு முன்னுதாரணமாகும்.

எனவே இன மதவேறுபாடுகளை கடந்து சொந்தங்களும், சுற்றமும் சூழ, அமைதியும், சாந்தியும், சமாதானமும் நிறைந்து, அன்புபொங்கும் இனிய நன்னாளாக பொங்கல் விழாவைக் கொண்டாடுவோம் என அவர் குறிப்பிட்டார்.

தைப்பிறந்தால் வழி பிறக்கும் என்பது ஆன்றோர் வாக்கு அதற்கமைய எதிர்க்காலத்தில் தமிழ் மக்கள் இன்னல்கள் நீங்கி நலன்களும்இ வளங்களும் பெற்று வாழ வேண்டும் என அவர் வாழ்த்தியுள்ளார்.

நாட்டில் நிலவுகின்ற இயற்கை சீற்றங்களிலிருந்து மீண்டு அனைவரும் மீள எழுச்சிபெறுவோம் எனவும் இதற்காக அனைவரும் ஒன்றிணைந்து இலங்கை பிரஜை என்ற ரீதியில் இன, மத பாகுபாடுகள் அற்றவகையிலும் செயற்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Source: https://www.ibctamil.com/srilanka/80/112417