பிளவுபடாத, ஒருமித்த நாட்டிற்குள் வாழ எமது மக்கள் ஆணை வழங்கியுள்ளனர். அதன்படி நாட்டில் சகல மக்களுடன் இணைந்துவாழ நாம் தயாராக உள்ளோம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிக்கவேண்டுமென கோரி மக்கள் விடுதலை முன்னணி முன்வைத்த சபை ஒத்திவைப்புவேளை பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”அண்மையில் நாட்டில் நடைபெற்ற சம்பவங்களுக்குகூட நிறைவேற்று அதிகாரமே காரணம். நிறைவேற்று அதிகார ஜனாதிபதி, தமக்கு இல்லாத ஒரு அதிகாரத்தை பயன்படுத்த முயற்சித்தார். அல்லது 19இற்கு முன்னர் இருந்த அதிகாரத்தை, வழமைப்போல் கொண்டுசெல்ல முயற்சித்தார். அரசியலமைப்பின் ஒவ்வொரு உறுப்புரிமையும் எழுத்தில் தெளிவாக உள்ளன. ஆனால் அவற்றை உதறித்தள்ளி இந்த செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது.

நாங்கள் கடந்த மாதத்தில் எதிர்கொண்ட விடயங்கள் மீண்டும் எதிர்காலத்திலும் ஏற்படலாம். ஆகவே அதனை நீக்க வேண்டும்.

நாட்டில் கடந்த 3 தசாப்தகலமாக இரத்த ஆறு ஓடிய யுத்தம் காணப்பட்டது. நாம் இழந்தவற்றை மீண்டும் திருப்பித்தர முடியாது. இந்நாட்டில் இரண்டாம் பட்ச மக்கள் என இருக்க முடியாது. அனைவருக்கும் சமமான உரிமை வழங்கப்பட வேண்டும்.

தமிழ் மக்களின் தேசிய பிரச்சினைக்கு தீர்வை எதிர்பார்த்து 7 தசாப்தங்களாக எமது மக்கள் உள்ளனர். ஆனால் அம்மக்களின் பிரச்சினை தொடர்ச்சியாக வந்த அரசாங்கங்களால் நிராகரிக்கப்பட்டு வருகின்றது.

பிளவுபடாத, ஒருமித்த நாட்டிற்குள் வாழ எமது மக்கள் ஆணை வழங்கியுள்ளனர். நாட்டில் சகல மக்களுடன் இணைந்துவாழ நாம் தயாராக உள்ளோம். அதனை வழங்க சிலர் தயாராக இல்லை. இந்நாட்டின் பிரச்சினை தொடருமாக இருந்தால் அதற்கு அவர்கள் தான் காரணம்.

புதிய அரசியலமைப்பை கொண்டுவரும்போது எமது கோரிக்கைகள் கணக்கிற்கொள்ளப்பட வேண்டும். அனைத்து மக்களும் சமமாக மதிக்கப்பட வேண்டும்” எனத் தெரிவித்தார்.

Source: http://athavannews.com/%e0%ae%92%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%95/