சட்டத்தை மீறி ஜனாதிபதியால் கூட எதனையும் செய்ய முடியாது என்பதை இன்றைய தீர்ப்பானது எடுத்து காட்டுகின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற கலைப்பு தொடர்பில் ஜனாதிபதியால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்குட்படுத்தும் வகையில் முன்வைக்கப்பட்ட மனு தொடர்பான தீர்ப்புக்கு ஆஜராகியிருந்த அவர் ஆதவனுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “உயர் நீதிமன்றினால் இன்று வழங்கப்பட்ட தீர்ப்பானது ஜனநாயகத்துக்கு கிடைக்கப்பெற்ற மாபெரும் வெற்றி. இதன் மூலம் நீதிமன்றம் சுயாதீனமாக தான் செயற்படுகின்றது என்பதை மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தியுள்ளது.

அத்தோடு சட்டத்திற்கு எல்லோரும் சமன் என்றும், சட்டத்தை மீறி ஜனாதிபதியால் கூட எதனையும் செய்ய முடியாது என்பதை இந்த தீர்ப்பு எடுத்துக்காட்டுகின்றது.

மக்கள் எதிர்பார்த்த தீர்ப்பே கிடைக்கப்பெற்றுள்ளது. எதிர்வரும் காலத்திலாவது ஜனாதிபதி அரசியலமைப்புக்கும் சட்டத்தினையும் உணர்ந்து செயற்பட வேண்டும்” என கூறினார்.

Source: http://athavannews.com/%e0%ae%9c%e0%ae%a9%e0%ae%a8%e0%ae%be%e0%ae%af%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%9f%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%aa/