சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் எதேட்சாதிகாரமான செயற்பாடுகளால் நாடும், நாட்டு மக்களும் மீண்டும் கடந்த காலத்தை போல இருண்ட யுகத்திற்குள் தள்ளப்பட்டும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் அச்சம் வெளியிட்டுள்ளார்.

இதனாலேயே ஏற்படுத்தப்பட்டுள்ள அரசியல் குழப்பத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்காக சிறுபான்மையின சமூகங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட கட்சிகள் முழுமையான ஈடுபட்டுடன் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

ஒட்டுமொத்த நாட்டினதும், நாட்டு மக்களினதும் நலன்கருதி தாங்கள் மேற்கொண்டுவரும் இந்த நடவடிக்கைகளை சிலர் இனவாதமாக சித்திரித்து பெரும்பான்மையின மக்கள் மத்தியில் குழப்பத்தை தோற்றுவிக்கும் சதிகளை முன்னெடுத்துள்ளதாகவும் சுமந்திர குற்றம்சாட்டியுள்ளார்.

உலகளாவிய ரீதியில் டிசெம்பர் 10 ஆம் திகதியான நேற்றைய தினம் சர்வதேச மனித உரிமைகள் தினம் அனுட்டிக்கபட்ட நிலையில், “மனித உரிமைகளை பாதுகாப்பதற்காக நடைமுறையிலுள்ள சவால்கள்” எனும் தலைப்பில் கொழும்பில் அமைந்துள் பண்டாரநாயக்க ஞாபகாரத்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் கருத்தரங்கொன்று இடம்பெற்றது.

மனித உரிமை செயற்பாட்டாளர்கள், பொது அமைப்புக்கள் இணைந்து நடத்திய இந்த கருத்தரங்கில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் சிறிலங்காவில் தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ள அரசியல் குழப்பங்கள் காரணமாக அனைவரினதும் மனித உரிமைகள் மீறப்பட்டு வருவதாக குறிப்பிட்டார்.

நாட்டில் ஏற்படுத்தபட்டுள்ள மிக மோசமான அரசியல் குழப்பங்கள் மனித உரிமைகள் விடையத்திலும் பெறும் சவாலை ஏற்படுத்தியிருப்பதாகவும் கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் தெரிவித்தார்.

இதனால் நாட்டில் நிலவும் அரசியல் குழப்பம் உடனடியாக தீர்வு காணப்பட வேண்டும் என்றும் வலியுறுத்திய ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன், இந்த செயற்பாட்டில் தோல்வியினை சந்தித்தால் மனித உரிமைகள் விவகாரம் பாரிய பின்னடைவை சந்திக்கும் என்றும் அச்சம் வெளியிட்டார்.

நாட்டில் ஏற்படுத்தப்பட்டுள்ள அரசியல் குழப்பத்திலிருந்து நாட்டை மீட்பதற்காக சிறும்பான்மையின சமூகங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும், தமிழ் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட கட்சிகள் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளை உடனடியாக இனவாத ரீதியில் திசைதிருப்பும் பாரிய சதித் திட்டமொன்றும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்ட கூட்டமைப்பின் பேச்சாளர் மத்தியாபரனம் ஏப்ரஹாம் சுமந்திரன் கடும் அதிருப்தியினை வெளியிட்டார்.

சிறிலங்கா ஜனாதிபதி மைத்ரிபால மஹிந்த ராஜபக்சவுடன் இணைந்து ஒக்டோபர் 26 ஆம் திகதி மேற்கொண்ட ஆட்சிக் கவிழ்ப்பை அடுத்து நாட்டில் ஏற்படுத்தபட்டுள்ள மிக மோசமான அரசியல் குழப்பங்களை முடிவுக்கு கொண்டுவருவதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பு, ரணில் தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி ஆட்சி அமைப்பதற்கு ஆதரவு வழங்குவதாக பகிரங்கமாக வாக்குறுதி அளித்துள்ளது.

தமது இந்த நிலைப்பாட்டை தமிழ் தேசியக் கூட்டமைப்பில் தொடர்ந்தும் அங்கம் வகிக்கும் 14 நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பத்துடன் சிறிலங்கா ஜனாதிபதிக்கு எழுத்துமூலமும் கூட்டமைப்பு உத்தியோகபூர்வமாக அறிவித்திருந்தது.

இந்த நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சமஷ்டி அடிப்படையிலான கோரிக்கையை ஏற்றுக்கொண்டு நாட்டை பிளவுபடுத்த ரணில் தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி இணங்கியுள்ளதாகவும், இதனால் நாடு பாரிய ஆபத்தை எதிர்நோக்கியுள்ளதாகவும் மஹிந்தவாதிகள் தொடர்ச்சியாக பிரசாரம் செய்து வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.

source:https://www.ibctamil.com/srilanka/80/110662