நாடாளுமன்றத்தை கலைப்பதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்ட விசேட வர்த்தமானி அறிவிப்பை இரத்துசெய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான தீர்ப்பு அடுத்த வாரமளவில் அறிவிக்கப்படவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

நீதிமன்றத்தில் வளாகத்தில் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

நீதிமன்ற விவாதங்கள் இன்றுடன் நான்கு நாட்கள் நடைபெற்றது. இறுதி விவாதங்களை கேட்ட நீதிபதிகள் விரைவில் தமது முடிவை அறிவிப்பதாக கூறியுள்ளனர்.

 

 

அதற்கான தினம் குறிக்கப்படாத நிலையில், அதுவரை இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் தீர்ப்பு அடுத்த வாரத்தில் வெளியாகும் என்று அறிவித்துள்ளனர்.

மேலும், தற்போது நாட்டில் பிரதமர் இல்லை. அத்தோடு மஹிந்த ராஜபக்சவும் பிரதமர் இல்லை என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை பிரதமராக நியமித்ததோடு, அப்பதவியிலிருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுடனான தேசிய அரசாங்க ஒப்பந்தத்தையும் முடிவுக்கு கொண்டுவந்தார்.

அதேபோல நவம்பர் மாதம் 9ஆம் திகதி 2096ன் கீழ் 70ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக நாடாளுமன்றத்தை கலைப்பதற்கான அறிவிப்பையும் விடுத்தார்.

ஜனாதிபதியினால் வெளியிடப்பட்ட இந்த வர்த்தமானி அறிவிப்பை இரத்து செய்யும்படி ஐக்கிய தேசிய முன்னணி, ஜே.வி.பி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட கட்சிகள் மனுக்களைத் தாக்கல் செய்தன.

பிரதம நீதியரசர் நளின் பெரேரா தலைமையிலான 7 பேரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்பாக இந்த விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

இந்த மனுக்கள் மீதான விசாரணை கடந்த நவம்பர் மாதம் 13ஆம் திகதி இடம்பெற்றபோது, குறித்த வர்த்தமானி அறிவிப்பு மீது உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவை டிசம்பர் 4ஆம் திகதிவரை பிறப்பித்தது.

இதன்படி பிரதம நீதியரசர் நளின் பெரேரா உட்பட பிரியந்த ஜெயவர்த்தன, பிரசன்ன ஜயவர்தன, சிசிர டி ஆப்ரு, விஜித் மாலல்கொட, புவனேக அலுவிஹாரே மற்றும் முர்து பெர்னாண்டோ ஆகிய ஏழு நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் குறித்த மனுக்கள் தொடர்ந்தும் நான்காவது நாளாகவும் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருந்தன.

விசாரணைகளின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அரசியல்வாதிகள், பெரும்பாலும் அடுத்தவாரமளவில் தீர்ப்பு வெளியாகலாம் என்று நம்பிக்கை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Source: https://www.tamilwin.com/politics/01/200900?ref=home-feeding