”பிரதமர் ஒருவர் நாட்டை ஆட்சிசெய்ய வேண்டுமாயின் அதற்கான அங்கீகாரம் பெறப்பட வேண்டும். மாறாக லஞ்சமும் மோசடியும் இந்த சபையை ஆள தீர்மானிக்க முடியாது” என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத்தினால் இன்று (வெள்ளிக்கிழமை) நாடாளுமன்றில் கொண்டுவரப்பட்ட சபை ஒத்திவைப்புவேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். எதிர்க்கட்சித் தலைவர் தொடர்ந்து குறிப்பிடுகையில்-

”நாட்டை பிரதமர் ஆள வேண்டுமாயின் அதற்கு அங்கீகாரம் பெற வேண்டும். லஞ்சமும் ஊழலும் ஆளும் சக்தியை தீர்மானிக்க முடியாது.

நாட்டின் இன்றைய நடத்தை காரணமாக, அதன் மதிப்பை இழந்துவிட்டது. சபாநாயகர் ஆசனம் தாக்கப்பட்டது. தேவையற்ற குழப்பங்கள் தோற்றுவிக்கப்பட்டன. இவை ஏன் ஏற்பட்டது?

நாடாளுமன்ற உறுப்பினர்களான நாங்கள் அரசியலமைப்பை மீறமுடியாது. நாங்கள் அரசியலமைப்பை மதிப்பதற்கு உரித்துடையவர்கள். இந்த சபை கௌரவமாகவும் கண்ணியமாகவும் நடத்தப்பட வேண்டும்.

இந்த நாட்டின் பிரதமராக செயற்பட வேண்டுமென மஹிந்த நினைக்கிறார். அதற்கான அங்கீகாரம் கிடைத்தால்தான் செல்லுபடியானதாகும். அதுவே எனது நிலைப்பாடு” என்றார்.

Source: http://athavannews.com/%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A/