•  

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் நேற்றையதினம் இலங்கையிலுள்ள வெளிநாட்டு இராஜதந்திரிகளை கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி அலுவலகத்தில் சந்தித்தபின்னர் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் ஊடகவியலாளர்கள் மத்தியில் வெளியிட்ட கருத்துக்களை பத்தோடு பதினொன்றாக நோக்கிவிடமுடியாது. அனுபவ முதிர்ச்சிமிக்க அவரது கருத்துக்கள் பெரும் கரிசனையைத் தருவதாக அமைந்திருக்கின்றன .

நேற்றையதினம் வெளிநாட்டு இராஜதந்திரிகளிடம் அவர் கூறிய விடயங்களில் பெரிதும் கரிசனைக்குரியதாக அமைந்த விடயத்தின் சாரம்சம் இதுதான்.

“நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் ஸ்திரமற்ற நிலை தொடர்ந்தால் சட்டத்தைப் பேணுவது – ஒழுக்கத்தைப் பேணுவது மிகவும் கடினமாகும். சமூகத்துக்கு விரோதமான சக்திகள் வன்முறையில் ஈடுபடலாம். அவ்வாறு ஈடுபடுகின்ற சந்தர்ப்பத்தில் சிறுபான்மை இன மக்கள் – விசேடமாகதமிழ் மக்கள் மோசமாகப் பாதிக்கப்படலாம்.

பெரும்பான்மைப் பலம் இல்லாத – அதிகாரம் இல்லாத ஆட்சி முறைமை இருக்கின்றபோது அதன் விளைவுகள்மிகவும் ஆபத்தானது; படுமோசமானது.”

இலங்கையின் கடந்த கால வரலாற்றை அறிந்தவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரின் கருத்துக்களுக்கு பின்னாலுள்ள கரிசனைகளை நன்கு அறிவர். பெரும்பான்மையினர் தமக்குள்ளே பிரச்சனைகளை ஏற்படுத்திக்கொள்ளும் சந்தர்ப்பங்களில் அதனைத் திசைதிருப்பும் வகையில் சிறுபான்மையினர் மீது குறிப்பாக தமிழர்கள் மீது வன்முறைகளையும் கலவரங்களையும் அராஜகத்தையும் அரங்கேற்றியமைக்கு பல உதாரணங்கள் இருக்கின்றன.

தற்போது நாட்டில் நடக்கும் அதிகார மோதல் பெரும்பான்மையினருக்கு இடையிலானது தானே நாம் எதற்கு அதற்குள் போய் சிக்கிக்கொள்ள வேண்டும் . கண்டும் காணாமல் இருந்துவிடுவோம். இந்த விடயத்தில் இருந்து ஒதுங்கிக்கொள்வோம் போன்ற குரல்களும் ஆங்காங்கே எமது சமூகத்தின் மத்தியில் இருந்து எழுகின்ற நிலையில் தமிழர்களாகிய நாம் இந்த விடயத்தை மிகவும் கரிசனைக்குரிய வகையில் அணுகவேண்டும்.

ஜனநாயகம் என்பது பட்டப்பகலில் படுகொலைசெய்யப்படுகின்றது என்பதை ஆளுங்கட்சியாகச் சொல்லிக்கொள்ளும் தரப்பினரைத் தவிர அனைத்து அரசியல் கட்சிகளும் சர்வதேச சமூகமும் சிவில் சமூகமும் சுட்டிக்காட்டிவருகின்ற போது தமிழ்த் தரப்பு மாத்திரம் கண்ணை மூடிக்கொண்டு திசைநோக்கிப் பார்க்க முடியுமா?

தமிழர்களுக்கு கடந்த காலத்தில் இழைக்கப்பட்ட அநீதிகளுக்கான நீதியை நோக்கிய போராட்டத்தை முன்னெடுத்திருக்கையில் எவ்வாறு ஒட்டுமொத்த நாட்டு மக்களின் ஜனநாயகத்தினைக் கேள்விக்குறியாக்கும் நடவடிக்கைகளைப் பார்த்து கைகட்டிக்கொண்டு இருக்க முடியும்?

ஜனநாயகத்தை மீள் நிறுத்தும் இன்றைய போராட்டத்தில் தமிழர் ஒதுங்கியிருப்பதன் மூலமாக தமிழர்கள் மீது கடந்த காலத்தில் இழைக்கப்பட்ட அநீதிகளுக்கான போராட்டம் முன்னேற்றம் காணுமா ?

தமிழர்களாகிய நாம் பெரும்பான்மையின அரசியல் தலைவர்களின் முகங்களைப் பார்த்தோ அவர்கள் அங்கம் வகிக்கும் கட்சிகளைப் பார்த்தோ அன்றி வரலாறு எமக்கு கற்பித்துள்ள பாடங்களை முன்னிறுத்தியே தீர்மானங்களை எடுக்க வேண்டும். அந்தவகையில் எம்முடைய அண்மைக்கால வரலாறு என்ன? 2005ம் ஆண்டு முதல் 2015 ம் ஆண்டு ஜனவரி வரை என்ன நடந்தது? 2015 ஜனவரி 8ம்திகதி முதல் என்ன நடந்தது?

முற்று முழுதாக எமது பிரச்சனைகள் இன்னும் தீர்க்கப்படவில்லை. இன்னமும் பல பிரச்சனைகள் இருக்கின்றன. ஆனால் கடந்த மூன்றரை ஆண்டு காலத்தில் எமது மக்கள் தமது நீதிக்கான போராட்டத்தை முன்னெடுப்பதற்கான ஜனநாயக இடைவெளியேனும் இருந்ததென்பதை மறுக்கமுடியுமா?

ஜனநாயகத்திற்கு முரணாக அரசியலமைப்பிற்கு முரணாக ஆட்சிக்கு வந்துள்ள தரப்பினர் தமது ஆட்சியை இந்த வடிவத்திலேயே நிலைப்படுத்தும் இடத்து எவ்வாறான அபாயங்கள் ஏற்பட வாய்ப்புக்கள் இருக்கின்றன என்பதை அனைவரும் சிந்தித்துச் செயற்படவேண்டும்.

தற்போதே கொழும்பு உட்பட பல பகுதிகளிலும் தமிழர்கள் சமஷ்டி கேட்கின்றனர் நாட்டைப் பிரிக்கப்பார்க்கின்றனர் இதற்கு ரணில் இணங்கிவிட்டார் போன்ற சுவரொட்டிகளைப் பார்க்க முடிவதுடன் ஊடகங்களிலும் தமிழர் தரப்பை இந்த அரசியல் நெருக்கடிக்கான மூலகாரணமாக குற்றம்சாட்டிப் பழிபோடும் படலம் முன்னெடுக்கப்படுவதைக் காணக்கூடியதாகவுள்ளது

தமிழர் தரப்பு இந்த வேளையில் எமது மக்கள் தொடர்ந்தும் வாழ வழிசெய்துகொண்டு அவர்களது உரிமைகளையும் கடந்த கால அநீதிகளுக்கான நீதியையும் வென்றெடுப்பதற்கு வழிவகைசெய்யவேண்டும்.

Source: http://athavannews.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF/