யாழில் கொல்லப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் தொடர்பில் இதுவரை விசாரணைகள் நடத்தப்படாமை குறித்து, தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.

ஊடக சுதந்திரமும் சமூக பொறுப்பும் பற்றிய கொழும்பு பிரகடனத்தின் 20ஆவது ஆண்டு நிறைவு விழா இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையிலேயே கூட்டமைப்பின் பேச்சாளர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”கடந்த காலங்களில் இடம்பெற்ற லசந்த விக்ரமதுங்க, கீத் நொயார், பிரகீத் எக்னெலிகொட ஆகியோர் மீதான தாக்குதல்கள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

யாழில் 14 தமிழ் ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஆனால் அக்கொலைகள் தொடர்பில் இதுவரை எவ்வித விசாரணைகளும் முன்னெடுக்கப்படவில்லை.

அதுமாத்திரமின்றி, யாழில் ஒரு ஊடகம் 33 தடவைகள் தாக்குதலுக்கு உட்படுத்தப்பட்டது. இது தொடர்பாகவும் விசாரணை நடத்தப்பட்டதாக இல்லை.

சில ஊடகங்கள் பொய்யான செய்திகளை வெளியிட்டு பொறுப்பற்ற வகையில் செயற்படுகின்ற போதிலும், நாட்டில் ஊடக சுதந்திரத்தினை வினைத்திறனாக கட்டியெழுப்ப வேண்டியது அவசியமாகும்” எனத் தெரிவித்தார்.

Source: http://athavannews.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95/