உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் உயிருக்கு ஆபத்து எதுவும் நடந்தால் அது பெரும் விபரீதமாகிவிடும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

அனுராதபுரம் சிறைச்சாலையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் 8 பேர் தமது விடுதலையை வலியுறுத்தி கடந்த 14ஆம் திகதி முதல் உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்தநிலையில் இதுதொடர்பில் கருத்து வெளியிடும் போதே இரா.சம்பந்தன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘அநுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதமிருக்கும் 8 தமிழ் அரசியல் கைதிகளின் கோரிக்கை தொடர்பில் ஜனாதிபதி அமெரிக்காவுக்குச் செல்வதற்கு முன்பே அவருடன் பேசியிருந்தேன். விரைந்து நடவடிக்கை எடுக்குமாறும் கூறியிருந்தேன்.

ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் தான் உரையாற்றிவிட்டு நாடு திரும்பியவுடன் இந்த விடயத்துக்குத் தீர்வு காண்பேன் என்று அவர் என்னிடம் உறுதியளித்திருந்தார்.

எனினும், உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள கைதிகளின் உடல்நிலை மோசமடைந்துள்ளது. அவர்களில் நால்வர் அநுராதபுரம் சிறைச்சாலை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்த விடயம் எமக்கு மிகவும் கவலையைத் தந்துள்ளது. அவர்களின் உயிருக்கு ஆபத்து எதுவும் நேர்ந்தால் அது பெரும் விபரீதமாகிவிடும். எனவே, இந்த விடயத்தில் அரசு உடன் கவனம் செலுத்த வேண்டும். உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கைதிகளைக் காப்பாற்ற வேண்டும்.

அத்துடன், நாட்டின் அனைத்து சிறைச்சாலைகளிலும் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் விடயத்தில் விரைவில் சில நடவடிக்கைளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுக்கவுள்ளது’ என தெரிவித்துள்ளார்.

Source: http://athavannews.com/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95/