மாவை  சேனாதிராஜா, கடற்றொழில் அமைச்சருக்கு விடுத்த கோரிக்கை

வலிகாமம் வடக்கு மயிலிட்டி துறைமுகம் புனரமைப்புக்காக ஜனாதிபதி அடிக்கல் நாட்டுவதற்கு முன்பதாக, மயிலிட்டி மண்ணில் இருந்து வெளியேற்றப்பட்ட மக்கள் பூரணமாக மீள்குடியேற்றப்பட வேண்டும் என கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சர் விஜித் விஜிதமுனி சொய்சாவுக்கு பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

மயிலிட்டி துறைமுகம் மிக நீண்ட காலத்தின் பின் இலங்கை மற்றும் நோர்வே அரசாங்கங்களின் பங்களிப்புடன் புனரமைக்கப்படவுள்ளது.

இதன் ஆரம்ப பணிகள் 22 ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலமையில் இடம்பெறவுள்ளது.

இதற்கான ஒழுங்குகள் குறித்து ஆராய்வதற்காக அமைச்சர் விஜிதமுனி சொய்சா நேற்று (12) யாழ். மாவட்டத்திற்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டு யாழ். மாவட்ட செயலகத்தில் விசேட கலந்துரையாடல் ஒன்றையும் நடாத்தியிருந்தார்.

ஊடகங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு இடம்பெற்ற இந்த கலந்துரையாடலின் நிறைவில், ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவுக்கு மேற்கண்டவாறு கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார்.

இது குறித்து பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா கூறுகையில், காலை முல்லைதீவில் நடந்த கலந்துரையாடலில் மீனவ சமூகமானது எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. இக் கலந்துரையாடலை தொடர்ந்து மயிலிட்டியில் ஜனாதிபதி அடிக்கல் நாட்ட வருகின்றார்.

அது தொடர்பாக ஆராயவே அமைச்சர் இங்கு வந்திருந்தார். உண்மையில் இந் நடவடிக்கையை நாம் வரவேற்க வேண்டும். அந்த நிலத்தின் விடுதலைக்காக மக்கள் போராட்டங்களை நடாத்தியுள்ளார்கள்.

ஆனால் அவ் அடிக்கல் நாட்டும் நிகழ்வை ஜனாதிபதி பெரும் விழாவாக செய்யவுள்ள நிலையில் அந்த பிரதேச மக்கள் முழுமையாக குடியமர்த்தப்படவில்லை.

அதற்கு முன்பாக அம் மக்கள் முழுமையாக குடியமர்த்த வேண்டும் என ஜனாதிபதிக்கு கூற வேண்டும் என அமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளோம்.

இதற்கு அமைச்சரும் சாதகமான பதிலை வழங்கியுள்ளார். மேலும் ஜனாதிபதி அடிக்கல் நாட்ட வருவதற்கு முன்பு அம் மக்களை குடியமர்தி விட வேண்டும் என நாங்களும் ஜனாதிபதியுடன் கலந்துரையாடுவோம் என்றார்.

(யாழ். நிருபர் பிரதீபன்)

Source: http://tamil.adaderana.lk/news.php?nid=105270