சட்டவிரோத கடற்தொழில் அனைத்தையும் உடனடியாக கட்டுப்படுத்த மீன்பிடி அமைச்சர்  நடவடிக்கை –   கூட்டமைப்பினர்  பங்கேற்பு

முல்லைத்தீவு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு  வந்த தடைசெய்யப்பட்ட கடற்தொழில்  முறைகளை இன்றிலிருந்து நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுப்பதாக கடற்தொழில் நீரியல் வளங்கள் மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சர் விஜித் விஜய முனி சொய்சா தெரிவித்துள்ளார்.

அத்தோடு மாவட்டத்தில் 25 பேருக்கு வழங்கப்பட்ட சுருக்குவலை அனுமதியையும் உடனடியாக அமுலுக்கு வரும்வகையில் மறு அறிவித்தல் வரும் வரை தற்காலிகமாக இரத்து செய்வதாகவும் முல்லைத்தீவுக்கு இன்றையதினம் விஜயம் மேற்கொண்ட அமைச்சர் தெரிவித்துள்ளார்.இதில் மீள்குடியேற்றம் புனர்வாழ்வு வடக்கு அபிவிருத்தி பிரதி அமைச்சர் காதர் மஸ்தான் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின்  பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா ,எம் ஏ  சுமந்திரன் ,எஸ் .சிவமோகன் ,சாள்ஸ் நிர்மலநாதன் ,சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா ,மற்றும் யாழ் மாவடட பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா வடக்கு மாகாண மீன்பிடி மற்றும் விவசாய அமைச்சர் சிவநேசன் ,மாகாணசபை உறுப்பினர்களான ரவிகரன் ,கமலேஸ்வரன் ,புவனேஸ்வரன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது .

முல்லைத்தீவு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் தடைசெய்யப்பட்ட தொழில்களை நிறுத்தக்கோரியும் 5000 க்கும் மேற்பட்ட  மீனவர்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கும் சுருக்குவலை அனுமதியை இரத்து செய்யக்கோரியும் கடந்த 02 ம் திகதி முதல் முல்லைத்தீவு கடற்தொழில் நீரியல் வளதிணைக்களம் முன்பாக மீனவர்கள்   கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில்  இன்று முல்லைத்தீவிற்கு விஜயம் செய்து மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் பிரச்சனைகள் தொடர்பில் கேட்டறிந்ததன் பின்னர் கருத்துத் தெரிவித்த அமைச்சர்

முல்லைத்தீவு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு  வருகின்ற தடைசெய்யப்பட்ட கடற்தொழில்களை  உடனடியாக  நிறுத்துவதற்கு நீரியல்வளத்திணைக்கள உத்தியோகத்தர்கள் மற்றும்  கடற்படை  பொலிஸாருக்கும் உத்தரவினை பிறப்பித்துள்ளதோடு ஆயிரக்கணக்கான மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ள   சுருக்குவலை  அனுமதி இருபத்தைந்தினையும் முல்லைத்தீவு மாவட்டத்தில் அமுலுக்குவரும் வகையில் தற்காலிகமாக இரத்துசெய்வதாக உத்தரவாதம் அளித்துள்ளார்.

குறிப்பாக, லைலாவலை, சுருக்குவலை ,வெளிச்சம் பாச்சி மீன்பிடித்தல், போன்ற தொழில்களை மேற்கொள்ளமுடியாது என்றும் தன்னுடைய காலத்தில் எந்தவிதமான இவ்வாறான  அனுமதிகளும்  வழங்கப்படவில்லை. இந்தப்பிரச்சனைகள் தொடர்பில் இரண்டு பகுதியினர் சம்பந்தப்படுகின்றனர்.

குறிப்பிட்ட ஒரு தொகுதியினருக்கு இந்த தொழில்களுக்கான அனுமதிகள் வழங்கப்பட்டிருக்கின்றன.

இவை தொடர்பில் ஆராய்வதற்காக குழுவொன்று நியமித்து அதன் மூலம்பிரச்சனைகள்; ஆராயப்பட்டு தீர்வுகள் பெற்றுத்தரப்படும் என குறிப்பிட்ட அவர், அந்த குழுவின் விசாரணைகள் முடிவடைந்து அறிக்கை கிடைக்கும் வரையில் இவ்வாறான மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் சுருக்குவலை தொழில்களை தற்காலிக நிறுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து கருத்துத்தெரிவித்த அமைச்சர் அவர்கள், யுத்தகாலத்தில் பாதிக்கப்பட்ட கரைவலைத் தொழிலாளர்களுக்கு நட்டஈடுகளை பெற்றுக்கொடுப்பதற்கும் கடல்தொழிலாளர்களுக்கான இருபது இலட்சம் ரூபா வரையான நிதியினை பெற்றுக்கொள்ளக்கூடிய காப்புறுதித்திட்டடம் ஒன்றினையும் முன்னெடுக்க இருப்பதாகவும் தெரிவித்த அவர், கிராமிய பொருளாதார அமைச்சர் என்ற வகையிலும் வாழ்வாதார உதவிகளை வழங்குவதற்கும் தான் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்த மீனவர் சமூகங்களுக்கும் அமைச்சருக்கும் இடையிலான சந்திப்பு இன்றுகாலை 10 மணிக்கு முல்லைத்தீவு மாவடட செயலாக மாநாட்டு மண்டபத்தில் மாவடட அரசாங்க அதிபர் ரூபாவாதி கேதீஸ்வரன் தலைமையில்  நடைபெற்றது

Source : http://www.virakesari.lk/article/38363