த.தே.கூவுடன் ரணில், தரஞ்சித்சிங் முக்கிய சந்திப்பு

பலாலி விமான நிலையத்திலிருந்து இந்தியாவுக்கு உடனடியாக விமான சேவைகள் ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதுடன் விமான நிலையம் தற்போதுள்ள நிலையிலிருந்தே இந்தச் சேவை தொடங்கப்படும் எனவும், அதன்  சேவைகள் ஆரம்பிக்கப்பட்ட பின்னர், பிராந்திய விமான நிலையமாக பலாலியை தரமுயர்த்தும் கட்டுமானப் பணிகள் முன்னெடுக்கப்படும் எனவும்,  இந்தப் பணிகளுக்காக மேலதிக காணிகள் எவையும் சுவீகரிக்கப்படாது எனவும் முடிவு எட்டப்பட்டுள்ளது.

பிரதமர்  ரணில் விக்கிரமசிங்க, இந்திய உயர்ஸ்தானிகர் தரஞ்சித்சிங் சந்து மற்றும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினருக்கிடையிலான  முத்தரப்புச் சந்திப்பு நேற்று இடம்பெற்றது. இதன்போதே மேற்கண்ட தீர்மானம்  மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பிற்கிணங்க பலாலி விமான நிலையத்தை பிராந்திய விமான  நிலையமாக தரம் உயர்த்துவதற்கு முதல்கட்டமாக தற்போது இருக்கின்ற நிலையிலேயே இந்தியாவுக்கு  விமான  சேவைகள் ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டதுடன் அந்தச் சேவையைத் தொடங்குவதற்கு உடனடியாக என்ன தேவைகள் உள்ளனவோ அவை பூர்த்தி செய்யவும் பன்னாட்டு  விமானங்கள் தரையிறங்குவதற்கும் இங்கிருந்து புறப்பட்டுச் செல்தற்கும் ஏதுவாக சமிஞ்ஞைக் குறியீடுகள் அமைக்க முடிவு எடுக்கப்பட்டதுடன் குடிவரவு மற்றும் குடியகல்வு, ஆயத்திணைக்களம் என்பனவற்றைச் செயற்படுத்துவதற்கு இப்போதுள்ள கட்டடங்கள் போதுமா என்பதை ஆராயவும் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.

அத்துடன் இந்தியாவிலிருந்து தொழில்நுட்பக் குழுவினர் உடனடியாக வருகைதந்து பலாலி விமான நிலையத்தைப் பார்வையிட்டு இந்தியாவுக்கான  விமான சேவைக்கான ஏனைய அடிப்படைத் தேவைகளை மதிப்பீடு செய்வார்கள்.  விமான சேவை ஆரம்பிக்கப்பட்ட பின்னர் பிராந்திய  விமான நிலையமாக தரமுயர்த்தி ஏனைய நாடுகளுக்கான  விமான சேவைகளும் நடத்தப்படும்

தற்போதுள்ள  விமான ஓடுதளத்துக்கு மேற்குப்புறமாக 500 ஏக்கர் காணியில் புதிய விமான நிலையத்துக்கான கட்டடங்கள் அமைக்கப்படவுள்ளது. இந்த அபிவிருத்தி முன்னேற்ற மீளாய்வு மாதாந்தம் கொழும்பில் நடைபெறவுள்ளது.

Source: http://www.virakesari.lk/article/37092