மீன்பிடித் துறை அமைச்சர் மகிந்த அமரவீர அவர்களுடைய 2 நாள் விஜயத்தின்
போது, அமைச்சர், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திரு. சுமந்திரன்,
வட மாகாண மீனவர்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் நேற்று
(10.01.2016) மீனவர் சங்கத் தலைவர்களுடன் யாழ்ப்பாணம் குருநகரில் நீண்ட
கலந்துரையாடலொன்றை நடத்தினர். இச் சந்திப்பில் இலங்கைத் தமிழரசுக்
கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜாவும் கலந்து கொண்டார்.

இச் சந்திப்பில்

– இலங்கைக் கடற் பரப்பில் இந்திய மீனவர்களது அத்துமீறிய மீன்பிடிப்புத்
தொடர்பில் இந்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தல்
– இலங்கைக் கடற்படையின் உதவியுடன் இந்திய மீனவர்களின் ஊடுருவலைத் தடுக்க
புதிய திட்டங்களை வகுத்தல்
– அரச நிதி ஒதுக்கீட்டுடன் வடக்கில் மீன்பிடித் துறைமுகங்களை விருத்தி செய்தல்
– வடக்கு மீனவர்களுடைய நாளந்த பிரச்சனைகளை ஆராய்ந்து, கடன் பிரச்சினை
தொடர்பாக பிரதமர், ஜனாதிபதியுடன் கதைத்து தீர்வு ஒன்றை அடைதல்
– தைப்பொங்கலுக்குப் பின்னர் 500 இந்திய இழுவை படகுகளை கைப்பற்றுதல்
– இந்திய மீனவர்கள் விடுதலை செய்யும் சந்தர்ப்பங்களில் அவர்களுடைய
படகுகளும், உபகரணங்களும் விடுதலை செய்யப்படாது.

என்ற முடிவுகள் எட்டப்பட்டது.

அமைச்சருடன் திரு. சுமந்திரன் இன்று (11.01.2016) காரைநகர்,
காங்கேசன்துறை பகுதிகளுக்கும் விஜயம் செய்தார். இதன் போது கைது செய்யப்பட
இந்திய மீனவர்கள் பாவித்த இழுவை படகுகளையும் பார்வையிட்டனர்.