யாழ்ப்பாணத்தில்இடம்பெறும்வன்முறைகளைத் தவிர்ப்பதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்று,தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

வன்முறைகளைத் தடுப்பதற்கு,உள்ளே இருக்கின்ற சவாலை நாங்கள் கண்டுகொள்ளாவிட்டால் அனைவரும் உள்ளிருந்தே சீரழிந்து விட நேரிடும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

வடக்கு கிழக்கு சமூக நல்லிணக்க அமைப்பின் ஏற்பாட்டில், ‘வன்முறை தவிர்ப்போம்; போதை ஒழிப்போம்’ என்ற தொனிப்பொருளிலான சமூக விழிப்புணர்வு செயற்றிட்டம்,இன்று யாழ்ப்பாணத்தில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் பங்கேற்று உரையாற்றும் போதே, எம்.ஏ.சுமந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

யாழ்ப்பாணத்தில் இருக்கும் மக்களுக்கு வெளியே இருந்து ஆபத்து வருகின்ற வேளையில் இங்குள்ள இளைஞர்கள் அதனை துணிந்து செய்தார்கள்.  உதாரணமாக,போருக்குப் பின்னரான காலத்திலும் கூட கிறீஸ் பூதம் வந்தது. அது யாராலே செய்யப்படுகின்றது என்பது தெரிந்தும்,யாழ். இளைஞர்கள் அவர்களுடன் போராடவும் அவர்களைத் துரத்திப் பிடிக்கவும் பயப்படவில்லை.  இதன்போது,நாவாந்துறையிலே இளைஞர்களின் தாக்குதலுக்கு உள்ளாகி நூற்றுக்கணக்கானவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்ததுடன்,அதில் 52 பேருக்கான வழக்கில் நான் தற்போதும் உயர்நீதிமன்றத்தில் முன்னிலையாகிக் கொண்டிருக்கின்றேன்.

வெளியே இருந்து ஆபத்து அல்லது சவால் வருகின்ற போது நாங்கள் கொதித்து எழுகின்றோம். ஆனால் தற்போது இடம்பெறும் வன்முறையை செய்பவர்கள் யார்? தமிழ் ஆண் மக்கள். தமிழ் இளைஞர்கள்.

வாள்களுடன் வீதி வீதியாக வீடுகளுக்குள் சென்று பெண்களை வாள்களால் வெட்டுகின்றவர்கள் வெளியில் இருந்து வந்தவர்கள் அல்ல. யாழ்ப்பாணத்தில் உள்ள இளைஞர்கள் தான் இதனைச் செய்கின்றார்கள்.

உள்ளே இருக்கின்ற சவாலை நாங்கள் கண்டுகொள்ளாவிட்டால் நாம் உள்ளிருந்தே சீரழிந்து விடுவோம். ஆகையினாலே இதற்கு எதிரான இந்த விழிப்புணர்வு இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளமை நல்ல விடயம்.

குறிப்பாக போதைப் பொருள் கடத்தல் போன்ற சம்பவங்கள் தொடர்பில் அறிந்தால் அது குறித்து பொலிஸாருக்கு தெரியப்படுத்துங்கள். அவ்வாறு தெரியப்படுத்த தயங்கினால் இந்தக் குழுவினருக்கு தெரியப்படுத்துங்கள். ஏனெனில் போதைப் பொருள் கடத்தல் சம்பவங்களுக்கு பொலிஸாரும் உடந்தை என்பது அனைவரும் அறிந்த விடயம் என்று அவர் தனது உரையின்போது குறிப்பிட்டார்.

இன்றைய இந்த நிகழ்வில் நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், யாழ். மாநகர முதல்வர் இம்மானுவல் ஆர்னோல்ட்,வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள்,உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்கள் மற்றும் உறுப்பினர்கள்,பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

அரசியல் தலைவர்கள்,பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோரின் உரைகளின் நிறைவில் ‘வன்முறை தவிர்ப்போம் – போதை ஒழிப்போம்’ பிரகடனம் உறுதி செய்யப்பட்டது.