முல்லைத்தீவு மாவட்டத்தில் மகாவலி அதிகாரசபைனால் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களை நிறுத்துவதற்கு ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்

கடந்த மாகாண சபை அமர்வில் சிங்கள குடியேற்றங்கள் தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளமை தொடர்பிலும் மாகாணசபை உறுப்பினர்கள் 38 பேரும் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு இடமாற்ம் செய்யப்பட்டமை தொடர்பிலும் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்வியொன்றிற்கு பதிலளிக்கும் போதே சுமந்திரன் இதனை தெரிவித்துள்ளார்

மகாவலி அதிகார சபையினால் முல்லைத்தீவு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள் தொடர்பாக தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைலவரும் எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் அண்மையில் ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.

இதன்போது மகாவலி அதிகார சபையின் அமைச்சராக செயற்பட்டு வரும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்படி திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களை நிறுத்துவதற்கு இணக்கம் தெரிவித்திருந்தார் என எம்.ஏ.சுமந்திரன் கூறியுள்ளார்.

இதனையடுத்து எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெறவிருந்த மகாவலி அதிகார சபையின் கூட்டமும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

மேலும் குறித்த விடயங்கள் தொடர்பில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தொடர்ந்தும் அரசாங்கத்திற்கு அழுத்தங்களை பிரயோகிக்கும் என எம்.ஏ.சுமந்திரன் மேலும் தெரிவித்துள்ளார்.