[ செவ்வாய்க்கிழமை, 05 சனவரி 2016, 04:47.14 AM GMT ]

“இலங்கையில் நல்லிணக்கத்தை நிரந்தரமாக்க வேண்டுமெனில் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகள் கிடைக்க வேண்டும்” என்று டோனி பிளேயரிடம் தான் வலியுறுத்தியதாக எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
இலங்கை வந்துள்ள பிரிட்டனின் முன்னாள் பிரதமர் டோனி பிளேயர் நேற்று (04) எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனை கொழும்பில் சந்தித்த போதே மேற்கண்டவாறு தெரிவித்தாக சம்பந்தன் கூறியுள்ளார்.

இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கேற்ப அரசு செயற்படவேண்டும் என்றும், பொறுப்புக்கூறலில் உண்மை, நீதி நிலைநாட்டப்படவேண்டும் என்றும் இதன்போது சுட்டிக்காட்டியதாக சம்பந்தன் தெரிவித்தார்.

அத்துடன், நிலையான அரசியல் தீர்வே தமிழ் மக்களுக்கு வேண்டும் என்றும் தான் வலியுறுத்தியதாக சம்பந்தன் கூறினார்.

இந்தச் சந்திப்புத் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் மேலும் தெரிவிக்கையில்,

“வடக்கிலே காணப்படும் அதிகளவிலான இராணுவப் பிரசன்னம், இன்னும் விடுவிக்கப்படாமல் இருக்கும் காணிப் பிரச்சினை, காணாமல்போனோர் தொடர்பான விசாரணைகள், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை உள்ளிட்ட தமிழ் மக்கள் எதிர்நோக்கும் அன்றாடப் பிரச்சினைகள் தொடர்பில் பிரிட்டனின் முன்னாள் பிரதமர் டோனி பிளேயரிடம் எடுத்துரைத்தேன். இந்தப் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வுகள் காணப்படுவதன் அவசியத்தையும் வலியுறுத்தினேன்.

வடக்கு, கிழக்குப் பிரதேசங்களில் காத்திரமான அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும், போரால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் வாழ்வாதாரங்கள் வலுப்படுத்தப்பட வேண்டும் எனவும் அவரிடம் தெரிவித்தேன்.

ஐ.நா. தீர்மானம் குறித்தும் அவர் என்னுடன் பேசினார். இதன்போது பொறுப்புகூறுதலானது உண்மை, நீதி போன்றவற்றை அடிப்படையாகக்கொண்டு செயற்படுத்தப்பட வேண்டும் என்று சுட்டிக்காட்டினேன்.

எமது தமிழ் மக்கள் எதிர்பார்க்கும் அரசியல் தீர்வு தொடர்பிலும் அவர் என்னிடம் கேட்டார். இதன்போது நியாயமான ஓர் அரசியல் தீர்வை எட்டுவதன் அவசியத்தை வலியுறுத்தினேன்” எனவும் கூறியுள்ளார்.

பிளயர், சம்பந்தனை சந்தித்தார்! சமாதான ஏற்பாட்டளராக செயற்படுவதாகவும் தகவல்
“>“>