இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்த உள்ளக விசாரணைக்கான பொறிமுறையினை அமைக்கும் வரைபில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இணக்கத்தையும் பெற்று முடிவு செய்ய வேண்டும் என்று அக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

2009இல் இலங்கை இறுதி யுத்தத்தில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து ஐக்கிய நாடுகள் சபையில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தில் கலப்பு விசாரணை ஒன்றை மேற்கொள்ள பரிந்துரைக்கப்பட்டதுடன் இலங்கை அரசு உள்ளக விசாரணை ஒன்றை நடத்துவதற்கு தயாராகி வருகிறது.

அரசாங்கம் மேற்கொள்ளவுள்ளதாக கூறப்படும் உள்ளக விசாரணைப் பொறிமுறைக்கான வரைபை தமிழ் மக்களின் பெரும்பான்மை ஆதரவைப் பெற்ற தமது கட்சியையும் இணைத்து முடிவுறுத்த வேண்டும் என்று அக் கட்சியின் பேச்சாளர் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

ஆட்சி மாற்றத்தின் பின்னர் பொறுப்புக்கூறுதல் தொடர்பில் அரசாங்கம் சர்வதேசத்திடமும் ஐக்கிய நாடுகள் சபையிடமும் தம்மிடமும் வாக்குறுதிகளை வழங்கியுள்ளதாகவும் அதனை நிறைவேற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அரசாங்கம் முன்னெடுக்கும் விசாரணை தொடர்பான பொறிமுறையில் தம்முடைய ஆலோசனைகளையும் அனுமதியையும் பெற்றுக்கொண்டே இறுதிப்படுத்த வேண்டும் என்று தெரிவித்த சுமந்திரன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயம் கிடைக்கும்பொருட்டு தாம் அரசாங்கத்தின் நடவடிக்கைகளை கண்காணித்து வருவதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.