மத்திய வங்கி திறைசேரி பிணைமுறி விவகாரம் தொடர்பில் விசாரித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் முழுமையான அறிக்கையை, விரைந்து பகிரங்கப்படுத்தப்பட வேண்டுமென்று, எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் வலியுறுத்தினார்.

தற்போது மட்டுமல்லாது, கடந்த காலத்திலும் நாட்டில் இடம்பெற்ற அனைத்து ஊழல் மோசடிகள் பற்றியும் விசாரிக்கப்பட்டு, உண்மைகள் கண்டறியப்பட வேண்டுமென்றும் அவர் தெரிவித்தார்.

திறைசேரி பிணைமுறி விவகாரம் தொடர்பாக, நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற சர்ச்சையின் மத்தியில் பேசும்போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில், தொடர்ந்துரையாற்றிய அவர் கூறியதாவது,

“ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் அறிக்கை, கூடிய விரைவில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்று, பிரதமர் உட்பட கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் அனைத்து உறுப்பினர்கள் மத்தியிலும் பொது இணக்கப்பாடொன்று காணப்பட்டது.

“அது தொடர்பில் எந்த முரண்பாடும் கிடையாது. ஆணைக்குழுவின் அறிக்கையானது, கூடிய விரைவில் சமர்பிக்கப்பட்டு விவாதத்துக்கு எடுக்கப்பட வேண்டும் என்பதில் நாம் ஏனைய உறுப்பினர்களுடன் இணைந்து உடன்படுகிறோம். இந்த விடயத்திலும் எந்தக் கருத்து முரண்பாட்டுக்கும் இடமில்லை.

இது, பொது நிதி தொடர்பானதும் நாடும் நாடாளுமன்றமும் கரிசணையுடையதுமான விடயமுமாகும். மக்களும் நாடாளுமன்றமும் இந்த விடயத்தில் கொண்டுள்ள அக்கறையானது, இந்த நாடாளுமன்றத்திலான விவாதம் விரைந்தவொரு சந்தர்ப்பத்தில் எடுத்துக்கொள்ளப்படாமல் இருப்பதன் மூலம் இந்த விடயம் எந்த விதத்திலும் திசைதிருப்படுவதை நான் ஏற்றுக்கொள்ளவில்லை” என்று அவர் இதன்போது தெரிவித்தார்.

அத்துடன், “பிணைமுறி விவகாரம் தொடர்பான ஆணைக்குழு அறிக்கை மட்டுமல்லாது, பாரிய ஊழல் மோசடிகள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையும் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும்” என்றும் எதிர்க்கட்சித் தலைவர் வலியுறுத்தினார்.

“ஆகவே இரு அறிக்கைகளும் நாடாளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டு இரு அறிக்கைகளும் நாடாளுமன்றத்தில் விவாத்திக்கப்பட்டு விடயங்களின் அடிப்படை வரை செல்ல வேண்டும். அது மட்டுமல்லாது, கடந்த காலத்திலும் அதேபோல், தற்போதும் இந்த நாட்டில் இழைக்கப்பட்ட அனைத்து ஊழல் மோசடிகள் தொடர்பிலும் விசாரிக்கப்பட்டு உண்மைகள் கண்டறியப்பட வேண்டும்” என்று அவர் இதன்போது குறிப்பிட்டார்.

“ஆணைக்குழுக்களின் அறிக்கைகள் பகிரங்கமாக வெளியிடப்பட்டிருக்காத சந்தர்ப்பங்களும் இந்த நாட்டின் வரலாற்றில் இருந்திருக்கின்றன. பல்வேறு ஆணைக்குழுக்கள் நியமிக்கப்பட்டு, அந்த ஆணைக்குழுக்களின் அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்ட போதிலும், அந்த அறிக்கைகள் பகிரங்கமானதாக வெளியிடப்பட்டிருக்கவில்லை.

“குறைந்தது இந்த அறிக்கையிலுள்ள உள்ளடக்கங்களையாவது வெளியிட்டமைக்காக ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் அரசாங்கத்துக்கும் நான் பாராட்டு தெரிவிக்கிறேன். அத்துடன், முழு அறிக்கையையும் வெளியிட்டு, அது தொடர்பில் விவாதமொன்றை நடத்துமாறும் வலியுறுத்துகிறேன்.

“விவாதத்தைத் தவிர்ப்பதற்கு முயற்சிக்கப்படுவதாக நாட்டு மக்கள் மத்தியில் அபிப்பிராயம் ஏற்படுத்தப்படக்கூடாது. மக்களுக்கு விடயங்கள் தெரியப்படுத்தப்பட வேண்டும். ஏனெனில் இது மக்களின் நிதியாகும். ஆகவே, அறிக்கை தொடர்பில் இந்த நாடாளுமன்றம் என்ன சொல்ல வேண்டும் என்பதை, மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும்” என்று சம்பந்தன் எம்.பி மேலும் தெரிவித்தார்.

 

http://www.tamilmirror.lk/செய்திகள்/அறிக்கையை-பகிரங்கப்படுத்துமாறு-ஐயா-வலியுறுத்தல்/175-210156