பொறுப்புக்கூறல் விடயத்தில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக்கு இலங்கை அரசாங்கம் வழங்கிய உறுதிமொழிகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை. இக்கால தாமதத்தினால் தமிழ் மக்கள் மிகவும் அதிருப்தி அடைந்துள்ளனர் என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

முன்னணி ஆங்கில நாளிதழொன்றிற்கு வழங்கிய செவ்வியிலேயே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

எனினும், அரசியல் தீரவு விடயத்தில் விரக்தியடையவோ விடயங்களை கைவிட்டுவிடவோ முடியாதென குறிப்பிட்டுள்ள சம்பந்தன், தற்போதைய சூழ்நிலையில் நமது நோக்கங்களில் தொடர்ந்தும் விடாப்பிடியாக இருந்து, விரைவானதும் வெற்றிகரமானதுமான முடிவைக் காண வேண்டுமென சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, கடந்த 2015 ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவளிக்க, மிகவும் சரியான தீர்மானத்தையே எடுத்தோம் என்பதில் எள்ளளவிலும் சந்தேகம் கொண்டிருக்கவில்லையென்றும் சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த மஹிந்த அரசாங்கத்தில் தமிழ் மக்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதோடு, நியாயமற்ற செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன. ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்பே தமிழ் அரசியலுடன் மைத்திரிபால சிறிசேனவிற்கு தொடர்பிருந்தது. தமிழ் மக்களின் கோரிக்கைகளுக்கு நியாயமான தீர்வு கிடைக்க வேண்டும் என்பதற்கு ஆதரவளித்தவர்களுள் மைத்திரியும் ஒருவர் என சம்பந்தன் தனது நேர்காணலில் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக கடந்த 1994ஆம் ஆண்டு தொடக்கம் 2000ஆம் ஆண்டு காலப்பகுதியில் அப்போதைய ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க கொண்டுவந்த அரசியலமைப்பு முன்மொழிவுகளுக்கு மைத்திரிபால சிறிசேன ஆதரவளித்துள்ளார். இவ்வாறான விடயங்களை வைத்து நோக்கும் போது, தமிழ் மக்கள் சார்பாக ஜனாதிபதி மைத்திரிக்கு அளித்த ஆதரவில் எவ்வித சந்தேகமும் இல்லையென எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

 

http://athavannews.com/?p=598270-