20 வது திருத்தச் சட்டத்தினை ஆதரிப்பதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு எண்ணியிருப்பதுடன், எதிர்வரும் 21 ஆம் திகதி இடைக்கால அறிக்கை வெளிவருமென்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது இல்லத்தில் இன்று (11) மாலை நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், 20 ஆம் திருத்த சட்டத்தின் இடைக்கால அறிக்கை இந்த மாதம் 20 ஆம் திகதி வெளிவரவுள்ளது.

கடந்த வருடம் நவம்பர் மாதம் தயாரிக்கப்பட்ட அறிக்கை. சிற்சில மாற்றங்கள் இருந்தாலும், அந்த காலத்தில் தயாரிக்கப்பட்ட இடைக்கால அறிக்கை தான் வெளிவரப் போகின்றது.

சில கட்சிகள் தமது நிலைப்பாடு என்ன என்பது பற்றி அறிக்கைகள் கொடுத்துள்ளார்கள்.

அவற்றினையும் இடைக்கால அறிக்கையின் ஒரு பகுதியாக வெளியிடுவது என வழிநடத்தல் குழு தீர்மானித்துள்ளது.

பிரதான அறிக்கையாகவும், மேலதிகமாகவும் சில கட்சிகளின் நிலைப்பாடுகளும் வெளிவரும்.

ஐக்கிய தேசியக்கட்சி தமது நிலைப்பாடு என வேறு எந்த நிலைப்பாட்டினையும் கொண்டு வரவில்லை.

பிரதான அறிக்கையில் பிரதான பகுதிகளை தாங்கள் ஏற்றுக்கொள்வதாக கூறியிருக்கின்றார்கள்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தனது நிலைப்பாட்டினை அறிக்கையில் கொடுத்துள்ளார்கள்.

வழிநடத்தல் குழுவில் இருப்பவர்களும் தமது நிலைப்பாட்டினை கொடுத்துள்ளார்கள்.

இவ்வாறான நிலையில், தமிழ் தேசிய கூட்டமைப்பினைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தலைவர் சம்பந்தனும் தானும் வழி நடத்தல் குழுவிற்கு எமது நிலைப்பாட்டினையும் கொடுத்துள்ளதாக எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

அதில் எமது அடிப்படைக் கொள்கைகளை வெளிப்படுத்தியுள்ளோம்.

நாட்டின் சுபாவம் சமஷ்டி அமைப்பாகவும், மதச் சார்பற்றதாகவும், வடகிழக்கு இணைந்த ஒரு அலகாக இருக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டினையும் வெளிப்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

ஆளுநரின் அதிகாரங்கள் மற்றும் பௌத்த மதத்திற்கு விசேட இடம்கொடுப்பதை மறுக்கவில்லை.

ஆனால், அனைத்து மதத்தினைச் சேர்ந்தவர்களும் சமமாக நடத்த வேண்டுமென்றும் வலியுறுத்தியுள்ளோம்.

இடைக்கால அறிக்கையின் பிரதான அறிக்கையில் சொல்லப்பட்டுள்ள விடயங்களுக்கு ஐக்கிய தேசிய கட்சியும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இணங்கி வருவார்களாக இருந்தால், அதில் உள்ளவற்றினைப் போன்று இணக்கப்பாட்டினை பரிசீலிப்பதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு தயாராக இருக்கின்றது என்றும் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 21 ஆம் திகதி அரசியலமைப்புப் பேரவையில் முன்வைக்கப்படும்.

அதன்பின்னர், முழு நாட்டிற்கும் அந்த அறிக்கையின் விடயங்கள் வெளியிடப்படும்.

ஒக்டோபர் மாதம் அரசியலமைப்புப் பேரவையில் விவாதம் ஒன்று நடக்கும். அதில் தீர்மானம் ஒன்றும் எடுக்கப்படமாட்டாது.

நாட்டிலும் இவை தொடர்பான வாத விவாதங்கள் நடைபெறுமென்றும் எதிர்பார்க்கின்றோம்.

மீண்டும் வழிநடத்தல்குழு கூடி, அரசியலமைப்பின் வரைபு ஒன்றினை செய்ய ஆரம்பிப்போம். விவாத்தில் சொல்லப்படும் கருத்துக்களையும் உள்ளடக்கி இறுதி வரைபினை செய்யும் பணி ஆரம்பிக்கப்படும்.

அந்த வரைபு வெளிவந்த பிறகு, உரிய தரப்புக்களுடன் பேசுவதற்கு தயாராக இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

http://www.athirady.com/tamil-news/news/1058752.html