காணிகளை விடுவிக்க படையினர் நிதி கோருவது துரதிஷ்டவசமானது என எதிர்க்கட்சித் தலைவர் இராஜவரோதயம் சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் பிரிட்டனின் நாடாளுமன்ற குழுவினருடன் நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் உள்ள எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இச் சந்திப்பின் போது இலங்கையின் தற்கால அரசியல் நிலவரங்கள் மற்றும் எதிர்கால திட்டங்கள் தொடர்பில் ஆராயப்பட்டுள்ளதாக எதிர்க் கட்சித் தலைவரை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.

காணாமல்போனோரின் உறவினர்கள் முன்னெடுக்கும் போராட்டம் மற்றும் காணி விடுவிப்பு என்பன தொடர்பில் தாம் நேரடியாக பார்வையிட்ட விடயங்களை பிரிட்டன் நாடாளுமன்ற குழுவினர் சம்பந்தனிடம் இதன்போது எடுத்துரைத்துள்ளனர்.

இந்த நிலையில், அரசாங்கத்தைப் பொறுத்தவரை சில விடயங்களில் காத்திரமான வேலைத்திட்டங்களை முன்னெடுக்கின்ற போதும், அதன் வேகம் குறைவானதாகும் என்றும், அது விரைவுபடுத்தப்பட வேண்டும் என்றும் சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார்.

காணாமல்போனோர் தொடர்பான பிரச்சினைக்கு காணாமல்போனோர் பணியகம் நிறுவப்பட்டு, அதனூடாக அந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்றும் சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இச் சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரனும் உடன் கலந்து கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 Source:http://www.tamilwin.com/politics/01/154704?ref=home-feed