வடக்கு மாகாண சபை நடவடிக்கைகளை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து இலங்கைத் தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள் 16 பேருக்கும் இன்று விளக்கமளிப்பேன் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்குட்பட்ட வடக்கு மாகாண சபையில் அமைச்சரவை விவகாரம் சூடுபிடித்துள்ள நிலையில், அந்த மாகாண சபையின் இலங்கைத் தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள் 16 பேரையும் இன்று புதன்கிழமை மாலை 5 மணிக்கு கொழும்பில் எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நடைபெறும் அவசர கூட்டமொன்றில் பங்குபற்றுவதற்கு வருமாறு கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அழைத்துள்ளார்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரான மாவை சேனாதிராஜா சார்பில் அவரது செயலாளர் இந்தக் கூட்டம் தொடர்பான தகவலை வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் 16 பேருக்கும் கூறியுள்ளார்.

இன்று மாலை கொழும்பில் நடைபெறும் கூட்டம் தொடர்பில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுடன் வினவிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

வடக்கு மாகாண சபையின் இலங்கைத் தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள் 16 பேருக்கும் எதிர்காலத்தில் வடக்கு மாகாண சபை நடவடிக்கைகளை எவ்வாறு எதிர்கொள்வது தொடர்பில் விளக்கமளிப்பேன்.

மேலும், இலங்கைத் தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜாவும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வார் என இரா.சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார்.

 

http://www.tamilwin.com/politics/01/154625?ref=home-feed