யாழ். குடாநாட்டில் தொடரும் கைது நடவடிக்கைகளை உடன் நிறுத்த வேண்டும் என தமிழ்தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் இது குறித்து நேரில் கோரிக்கை விடுக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாணத்தில் தற்போதைய நிலைவரம் குறித்து ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு இவ்வாரம் பேச்சுக்களை நடத்தவுள்ளதாகவும் அதேபோன்று தற்போதைய நிலைவரங்கள் குறித்து நேரில் ஆராய்வதற்காக சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க அடுத்தவாரம் யாழ்ப்பாணம் செல்லவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், யாழ்ப்பாணத்தில் தொடரும் கைதுகளை உடனடியாக நிறுத்துமாறு சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்கவிடம் கேட்டுக் கொண்டுள்ளதாகவும் இன்று நடைபெறவுள்ள நாடாளுமன்ற அமர்வில் இது குறித்து கலந்துரையாடவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் கடந்த பத்து நாட்களுக்குள் பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினரால் 40ற்கும் மேற்பட்ட இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வடமராட்சியில் மாத்திரம் 27 பேர் கைது செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.