காலத்தின் பரிணாம வளர்ச்சி, தொழில்நுட்ப வளர்ச்சி என்பவற்றுடன் மக்களின் வாழ்க்கை முறை, மாற்றங்களுடன் பின்னிப் பிணைந்து தனது தொன்மை மாறாத வகையில் இருக்கும் எனவும் மாற்றங்களையும் உள்வாங்கி நகருகின்ற மொழி தான் சிறந்த வளர்ச்சி நிலையை எட்டும் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துடன் இணைந்து நடாத்திய 13 ஆவது பன்னாட்டு மாநாட்டின் இரண்டாவது நாள் நிகழ்வு நேற்றைய தினம் (06) யாழ்ப்பாணம் ரில்கோ விருந்தினர் விடுதியில் இடம்பெற்றது.

இதன்போது கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

யாழ்ப்பாணத்தில் இந்த வருடத்துக்கான சர்வதேச மாநாட்டு விழா நகரமாகத் தேர்ந்தெடுத்தமைக்காகத் உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்திற்கு நன்றிகள்.

உலகத்திலுள்ள மொழிகளில் மூத்த மொழிகளில் ஒன்றான தமிழ் மொழி இன்றுவரை வழக்கொழிந்து போகாமல் காணப்படுகின்றது.

தற்போதைய காலகட்டத்தில் தமிழ்மொழி வளர்ச்சியடைந்திருக்கிறது. அது இன்னமும் வளர்ச்சியடைய வேண்டும். மொழி காலத்துடன் இணைந்து வளராவிட்டால் அது வழக்கொழிந்து போய்விடும்.

எப்போது தோற்றம் பெற்றுள்ளது? என அறிஞர்களால் உய்த்து உணர முடியாத காலத்திலிருந்து வளர்ச்சியடைந்து வரும் எமது மொழி தன்னுடன் சேர்த்துப் பண்பாட்டையும் வளர்த்து வருகிறது.

தமிழ்மொழி நீடுழி காலம் வாழ வேண்டும் எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

http://www.tamilwin.com/politics/01/154487?ref=home-feed