தமிழ் மக்களின் அனைத்துப் பிரச்சினைகள் குறித்தும் மைத்திரி ரணில் தலைமையிலான நல்லாட்சி அரசுடன் நாம் தொடர்ந்து பேசி வருகின்றோம்.

இந்நிலையில், இந்த ஆட்சியைக் கவிழ்க்க தென்னிலங்கையில் சதி முயற்சியில் சிலர் ஈடுபடுகின்றனர் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

“தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள்முதல் அரசியல் பிரச்சினைகள் வரை அனைத்துப் பிரச்சினைகள் குறித்தும், அவற்றுக்குரிய தீர்வுகளைப் பெற்றுக்கொள்வது குறித்தும் மைத்திரி ரணில் அரசுடன் நாம் பேசி வருகின்றோம்.

அவற்றுக்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றோம். இவ்வாறான நிலைமையில் தான் சில, பல குழப்பங்களும் ஏற்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

புதிய அரசமைப்பு வரவிருக்கின்ற நிலையில் தென்னிலங்கையிலுள்ள பௌத்த பிக்குகளும் ஊழல் மோசடிக்காரர்களுமே குழப்ப நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர். அவ்வாறானவர்கள் தற்போது அமைக்கப்பட்டிருக்கின்ற ஆட்சியைக் கவிழ்க்கும் சதி முயற்சியில் ஈடுபடுகின்றனர்.

இன்றைய நிலையில் சர்வதேசம் எமக்கு ஆதரவாக இருக்கின்றது. அத்தோடு, பிரதான கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சியும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து ஆட்சியில் அமர்ந்திருக்கின்றன. இதுவொரு நல்ல சந்தர்ப்பம். இப்படியானதொரு சந்தர்ப்பம் இதற்கு முன் எமக்குக் கிடைத்ததில்லை. ஆகையால்தான் நாம் இந்தச் சந்தர்ப்பத்தை சரிவரப் பயன்படுத்துவதற்காகச் செயற்படுகின்றோம்” – என்றார்.

 

http://www.tamilwin.com/politics/01/154076?ref=home-feed