முல்லைத்தீவு – கேப்பாப்புலவு பகுதியில் படையினரின் கட்டுப்பாட்டில் இருக்கும் காணிகளை விடுவிப்பதற்கு பத்து நாள் கால அவகாசம் வேண்டும் என கேப்பாப்புலவு மக்கள் பிரதிநிதிகளிடம் எதிர்க்கட்சித்தலைவர் இரா.சம்பந்தன் கோரிக்கை விடுத்துள்ளார்.—

கேப்பாப்புலவில் 3ம் கட்டமாக விடுவிக்கப்பட வேண்டிய 111 ஏக்கர் காணி தொடர்பிலும் 4ம் கட்டமாக விடுவிக்கப்பட வேண்டிய 70 ஏக்கர் காணி அமைச்சர் சுவாமிநாதன் தலைமையில், இன்று முக்கிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

மீள்குடியேற்ற அமைச்சில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் இரா.சம்பந்தன், டக்ளஸ் தேவானந்தா, உள்ளிட்டவர்களுடன் கேப்பாப்புலவு மக்கள் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

இதன்போது 111 ஏக்கர் காணியை விடுவிப்பதற்கு இராணுவம் இணங்கியுள்ளதாகவும், இராணுவம் அங்கிருந்து விலகிச் செல்வதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்திருந்தார்.

எவ்வாறாயினும், இந்த பணிகளை நிறைவேற்றி முடிக்க எதிர்வரும் டிசம்பர் மாதம் வரை கால அவகாசம் தேவை என அமைச்சர் கோரிக்கை விடுத்தார்.

எனினும், டிசம்பர் வரைக்குமான கால அவகாச கோரிக்கையை கேப்பாப்புலவு மக்கள் பிரதிநிதிகள் ஏற்று கொள்ளவில்லை.

இந்நிலையில், மக்கள் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடிய இரா சம்பந்தன், பிரச்சினைக்கான தீர்வை அறிவிப்பதற்காக 10 நாட்கள் கால அவகாசத்தை கோரியுள்ளார்.

மேலும், பாதுகாப்பு படையின் தலைமை, பாதுகாப்பு செயலாளர் உட்பட்ட தரப்புக்களை சந்தித்து இந்த விடயத்திற்கான தீர்வை பெற்றுத்தரவுள்ளதாகவும், இரா.சம்பந்தன் உறுதியளித்துள்ளார்.

 

Source: http://www.tamilwin.com/politics/01/153271?ref=home-feed