ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கை அரசாங்கத்திற்கு இரண்டு ஆண்டுகள் கால அவகாசம் வழங்குவதை தமிழ் மக்கள் விரும்பவில்லை என எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

எனினும், ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கை வழங்கிய உறுதி மொழிகளை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காகவே இந்த கால அவகாசம் வழங்குவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இணக்கம் வெளியிட்டிருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல் துறை இணைச் செயலாளர் ஜெஃப்ரி ஃபெல்மேனை இன்று சந்தித்து பேசிய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே இவ்வாறு கூறியுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், “நாட்டில் நீண்ட காலமாக இருந்து வந்த தரித்திரம் தொடரக் கூடாது. அத்துடன், பெரும்பான்மை கட்சிகளுக்கு இடையில் காணப்பட்ட போட்டியின் காரணமாக தமிழ் மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளார்கள்.

இந்நிலை மீண்டும் இடம்பெறுவதற்கு இடமளிக்க கூடாது. தற்போது தமிழ் மக்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் விஷேட கவனம் செலுத்தியுள்ளதுடன், உதவுவதற்கும் முன்வந்துள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கை அரசாங்கத்திற்கு இரண்டு ஆண்டுகள் கால அவகாசம் வழங்குவதை தமிழ் மக்கள் விரும்பவில்லை.

எனினும், ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கை வழங்கிய உறுதி மொழிகளை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காகவே இந்த கால அவகாசம் வழங்குவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இணக்கம் வெளியிடப்பட்டது.

தற்போது நான்கு மாதங்கள் கடந்துள்ளன. எனினும், ஏற்பட்டிருக்கும் முன்னேற்றங்கள் போதுமானதாக இல்லை. இந்நிலையில், துரித கதியில் முன்னேற்றங்கள் மேற்கொள்ள வேண்டும்.

மேலும் படையினர் கட்டுப்பாட்டில் உள்ள காணிகள், காணாமல் போனவர்கள் விவகாரம் மற்றும் அரசியல் கைதிகள் சம்பந்தனமான விடயங்கள் குறித்தும் இன்றைய சந்திப்பின் போது கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இன்றைய சந்திப்பின் போது கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன் மற்றும் எம்.ஏ.சுமந்திரன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.