பாதுகாப்புத் தரப்பினரால் இழைக்கப்பட்ட போர்க்குற்றங்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுப்பதாக சர்வதேச சமூகத்துக்குக் கொடுத்திருந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற அரசு தவறிவிட்டது என்ற ஐ.நா. சிறப்பு அறிக்கையாளர் பென் எமர்சனின்

அறிக்கையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மனதார வரவேற்பதாக அந்தக் கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

அத்துடன், போர்க்குற்ற விசாரணையிலிருந்து இலங்கை அரசு ஒருபோதும் தப்பிக்கவே முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இலங்கைக்கு வருகை தந்த ஐ.நா. சிறப்பு அறிக்கையாளர் பென் எமர்சன், தனது விஜயத்தின் முடிவில் இலங்கை தொடர்பான அறிக்கையை வெளியிட்டிருந்தார்.

அத்துடன், கொழும்பில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் மிகக் காரசாரமான குற்றச்சாட்டுகளை இலங்கை அரசு மீது சுமத்தியிருந்தார்.

இவரது அறிக்கை தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு என்ன என்று எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனிடம் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது, “ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கையின் தற்போதைய அரசு இணை அனுசரணை வழங்கி நிறைவேற்றிய தீர்மானத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தவேண்டும்.

இதனை நாம் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றோம். தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதிலிருந்தோ, போர்க்குற்ற விசாரணையிலிருந்தோ இலங்கை அரசு தப்பிக்கவும் முடியாது நழுவவும் முடியாது.

ஐ.நா. தீர்மானத்தை இலங்கை அரசு நடைமுறைப்படுத்தவில்லை என்பதால், கடும் எதிர்ப்பு அழுத்தங்களைப் பிரயோகித்து காலஅவகாசத்தை ஐ.நா. வழங்கியது.

எனவே, பரிந்துரைகளை முழுமையாக நடைமுறைப்படுத்தவேண்டிய கடப்பாடு அரசுக்கு இருக்கின்றது. ஐ.நா. சிறப்பு அறிக்கையாளரின் அறிக்கையை நாம் முழு மனதுடன் வரவேற்கின்றோம்.

ஐ.நா. தீர்மானம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டாலே நாட்டில் நல்லிணக்கம் தோன்றும். மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றம் இனிமேல் நடைபெறாது என்பது உறுதிப்படுத்தப்படவேண்டும்.

மஹிந்த அரசு சர்வதேச சமூகத்துக்கு வழங்கிய வாக்குறுதிகளை மீறிச் செயற்பட்டது. சர்வதேச சமூகத்தைப் பகைத்துக்கொண்டது. வழிதவறி நடந்தது.

ஆட்சிமாற்றம் ஏற்பட்டது. தற்போதைய அரசும் முன்னைய அரசின் பாதையில் செல்ல முற்படக்கூடாது. புதிய அரசமைப்பு விடயத்தில் இந்த அரசு சில கருமங்களைச் செய்துள்ளது.

ஆனால், நாம் எதிர்பார்க்கும் அளவுக்கு விடயங்கள் நடைபெறவில்லை. அரசு துரிதமாகச் செயற்படவேண்டும். இனப்பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வு விரைவாக எட்டப்படவேண்டும்.

கடந்த அரசு வழிமாறிச் சென்றமையால், நாட்டில் மூவின மக்களும் ஒன்றுசேர்ந்து ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்தினர். வடக்கு, கிழக்கில் தமிழ் தமது அன்றாடப் பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை என்பதற்காக தொடர் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

அரசியல் கைதிகள் விடயத்தில் நாம் கோரியது நடக்கவில்லை. காணிகள் கொஞ்சம் விடுவிக்கப்பட்டிருக்கின்றது. காணாமல் போனோர் விவகாரத்தில் அலுவலகம் இன்னமும் அமைக்கப்படவில்லை.

வடக்கு, கிழக்கில் மக்கள் நடத்தும் போராட்டங்களுக்கு மூவின மக்களும், மூவின அரசியல்வாதிகளும் கலந்துகொண்டுள்ளனர். மக்களின் போராட்டம் நியாயமானது என்பது இதனூடாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கின்றது.

அரசு இதனைப் புரிந்துகொள்ளவேண்டும். அந்த மக்களின் பிரச்சினை உடனடியாகத் தீர்க்கப்படவேண்டும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

http://www.tamilwin.com/politics/01/152249?ref=home-feed