பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் எழுப்பிய கேள்வியினால் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் வாயடைத்துப் போன சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்றைய தினம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த நிலையில், சிறப்பு அபிவிருத்திக் குழுக் கூட்டத்திலும் கலந்துகொண்டிருந்தார்.

இதன்போது இரணைதீவு மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் கேள்வியெழுப்பியிருந்தார்.

இரணைதீவு மக்கள் இடம்பெயர்ந்த நிலையில், தற்போது சொந்த இடங்களில் மீள்குடியேற்றுமாறு வலியுறுத்தி தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

எனவே, குறித்த மக்களை அவர்களின் சொந்த இடங்களில் மீள் குடியேற்ற வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் வலியுறுத்தியிருந்தார்.

இதற்கு பதிலளித்து பேசிய மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் “இரணைதீவில் கடற்படையினரின் ரேடர்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதன் காரணமாக கதிரியக்க பாதிப்புகள் ஏற்படும்.

எனவே, அந்த பகுதியில் இருந்து இடம்பெயர்ந்த மக்களை வேறு இடங்களில் மீள்குடியமர்த்துவது தொடர்பில் ஆலோசிக்கப்பட்டு வருவதாக” அவர் கூறியிருந்தார்.

எனினும், இதற்கு பதிலளித்து பேசிய சிறீதரன் எம்.பி. “இரணைதீவில் அமைக்கப்பட்டுள்ள ரேடர்களால் பொதுமக்களுக்கு பாதிப்பு என்றால், கடற்படையினர் எப்படி தங்கியுள்ளனர்? என்று கேள்வி எழுப்பினார்.

அத்துடன், குறித்த பகுதியில் உள்ள ரேடர் கருவிகளை வேறு சிறிய தீவுகளுக்கு மாற்றிவிட்டு, இரணைதீவில் மக்களை குடியமர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

http://www.tamilwin.com/politics/01/148958?ref=home-feed