‘தமிழ் மக்களின் உரிமைகளை உறுதி செய்வோம்’ எனும் தொனிப்பொருளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மே தின நிகழ்வுகள் கிழக்கு மாகாணத்தில் ஆரம்பமாகியுள்ளன.

அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு மருதடி மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தில் இருந்து ஆரம்பமான கூட்டமைப்பின் மே தின ஊர்வலம் அக்கரைப்பற்று பிரதான சுற்றுவட்டம் ஊடாக ஆலையடிவேம்பு தர்மசங்கரி விளையாட்டு மைதானத்தை வந்தடைந்துள்ள நிலையில், அங்கு பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது.

இதன்போது, வடக்கு- கிழக்கு இணைப்பை வலியுறுத்தியும், அப்பாவி விவசாயிகளின் காணி ஆக்கிரமிப்பை எதிர்த்தும் கோஷம் எழுப்பியவாறு மக்கள் ஊர்வலமாக சென்றிருந்தனர்.

அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் க.கோடீஸ்வரன் தலைமையில் நடைபெற்று வரும் மே தின நிகழ்வுகளில் ஜனநாயக சோசலிச குடியரசின் எதிர்க்கட்சி தலைவரும் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன், கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள், கட்சித்தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் என பெருந்திரளானோர் கலந்துகொண்டுள்ளனர்.

‘தமிழ் மக்களின் உரிமைகளை உறுதி செய்வோம்- இலங்கை திருநாட்டில் பாராபட்சம் அகன்று சமத்துவம்- சகோதரத்துவம் தோன்றி தொடர உழைத்திடுவோம்- தொழிலாளர் தம் வாழ்வு வளம்பெற கைகொடுப்போம்’ எனும் தொனிப்பொருளில் கூட்டமைப்பின் தொழிலாளர் தின நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

TNA3TNA1TNA2

Source : http://athavannews.com/?p=457353