மேல் நீதிமன்ற நீதிபதி இராமநாதன் கண்ணனுடைய நியமனம் அரசியலமைப்புச் சட்டத்தின் பரிந்துரைகளுக்கமையவே மேற்கொள்ளப்பட்டுள்ளதென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்தார்.

அதே நேரம் கூட்டமைப்புக்கு இந்த விடயத்தில் எவ்வித தொடர்பும் இல்லையென்றும் அவர் கூறினார்.

மேல் நீதிமன்ற நீதிபதி இராமநாதன் கண்ணனின் நியமனத்தை எதிர்த்துக் கருத்துக் கூறுவதன் மூலம் நீதிபதிகள் சங்கம் மேல் நீதிமன்றினையே அவமதிக்கும் வகையில் செயற்படுகிறதென்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இது பற்றி மேலும் கருத்துக் கூறிய அவர்:

மேல் நீதிமன்ற நீதிபதி இராமநாதன் கண்ணனுடைய நியமனம் சம்பந்தமாக நீதிபதிகள் சங்கம் ஏகமனதான தீர்மானமொன்றை நிறைவேற்றியிருப்பதாக பத்திரிகைகளில் செய்தி வெளியாகியுள்ளது.

இந்த நியனம் சம்பந்தமாக இரண்டு விளக்கங்களை நான் வழங்க விரும்புகின்றேன்.

அவர் நியமனம் செய்யப்பட்ட போது, தமிழ் தேசிய கூட்டமைப்பின் சிபாரிசின் பேரிலேயே நியமிக்கப்பட்டதாக பொய்யான வதந்தி பரப்பப்பட்டது. அதனை அப்போதே நாங்கள் மறுத்திருந்தோம். தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கோ அதில் அங்கம் வகிக்கும் எவருக்குமோ இந்த நியமனத்தில் எந்தவித தொடர்பும் இருக்கவில்லை.

இரண்டாவது அவருடைய நியமனம் சட்டபூர்வமாக சரியான முறையிலேயே இடம்பெற்றிருக்கின்றது.அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் ஒரு மேல் நீதிமன்ற நீதிபதியை ஜனாதிபதிதான் நியமிக்கலாம். ஜனாதிபதி நியமிப்பதற்கு முன்னதாக நீதிச்சேவை ஆணைக்குழுவின் சிபார்சு அந்நியமனத்துக்கு இருக்க வேண்டும். அத்துடன் இதுகுறித்து சட்டமா அதிபருடன் கலந்துரையாடப்படவும் வேண்டும் இவையிரண்டும் அவரது நியமனத்தின் போது நிகழ்ந்துள்ளன.

நீதிச்சேவை ஆணைக்குழுவின் சிபாரிசும் சட்டமா அதிபரின் சிபாரிசும், அவரது நியமனத்துக்கு கிடைத்துள்ளன. எனவே அதுவோர் சட்டபூர்வமான நியமனமாகும்.சட்டபூர்வமான முறையில் நியமிக்கப்பட்டு தனது கடமைகளைப் பொறுப்பேற்ற அவர் தற்போது மேல் நீதிமன்ற நீதிபதியாக கடமையாற்றிக் கொண்டிருக்கின்றார்.

இந்த வேளையில் நீதிபதிகள் சங்கமும் சட்டத்தரணிகள் சங்கமும், இந்நியமனத்துக்கெதிராக வெவ்வேறு கருத்துக்கள் கூறுவதும், ஒரு முறையற்ற செயல் என்று நான் கருதுகின்றேன்.

அரசியலமைப்புச் சட்டத்தின் பிரகாரம் ஒரு மேல் நீதிமன்ற நீதிபதியை பதவி விலக்குவதாக இருந்தால் அதுவும் நீதிச்சேவை ஆணைக்குழுவின் சிபாரிசின் பேரிலேயே மேற்கொள்ளப்பட வேண்டும். அந்த சிபாரிசும் ஒரு ஒழுக்காற்று நடவடிக்கையின் பின்னர்தான் செய்யப்பட முடியும்.

மேல் நீதிமன்ற நிதிபதி ஒழுக்காற்று நடவடிக்கையில் குற்றவாளியாக காணப்பட்டால் மட்டுமே அவரைப் பதவியில் இருந்து அகற்றுமாறு ஜனாதிபதிக்கு நீதிச்சேவைகள் ஆணைக்குழு சிபாரிசு செய்யும். அப்படியிருக்க, அவரைப் பதவியில் இருந்து விலக்குமாறு கோருவது, முற்றிலும் சட்டவிரோதமான ஒரு செயற்பாடு.

அதுமட்டுமல்லாமல், நீதிபதிகள் சங்கமோ சட்டத்தரணிகள் சங்கமோ, இந்நியமனங்கள் தொடர்பில் எந்தவித ஈடுபாடும் கொள்ளத் தேவையில்லை. சட்டத்தில் அதற்கு இடமுமில்லை. அவ்வாறிருக்க அவ்வாறாதொன்றைக் கோருவது, நீதிச்சேவை ஆணைக்குழுவின் சுயாதீனச் செயற்பாடுகளில் சட்டவிரோதமான முறையில் தலையீடு செய்வதாகவும், மேல்நீதிமன்றத்தை அவமதிக்கும் ஒரு குற்றமாகவும் கூட கருதப்படலாம்.

ஏனெனில் தற்போது மேலநீதிமன்ற நீதிபதியாகக் கடமையாற்றும் ஒருவரை காரணமின்றி பதவி விலகக் கோருவது, அந்த நீதிமன்றுக்கு செய்யும் அவமதிப்பு குற்றமாகக் கணிக்கப்படலாம்.

ஒரு தொழிற்சங்கமான நீதிபதிகள் சங்கம், இந்த விடயத்தில் அரசியலமைப்புச் சட்டத்துக்கும் நாட்டின் சட்டத்துக்கும் விரோதமாகச் செயற்படாமல் இருக்க இருக்க வேண்டும்

Source: http://www.tamilwin.com/politics/01/141547?ref=home-feed