வடக்கில் இராணுவத்தினர் நிலைகொண்டுள்ள தனியாருக்கு சொந்தமான காணிகள் தொடர்பான இரண்டு விடயங்களைப்பற்றி எதிர்க்கட்சித்தலைவர் இரா.சம்பந்தன், ஜனாதிபதிக்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
வடக்கு மாகாணத்தில் ஆயுதப்படையினர் தங்கியிருக்கும் தனியாருக்கு சொந்தமான காணிகள் தொடர்பான இரண்டு விடயங்கள் பற்றி தங்கள் தயைகூர்ந்த கவனத்திற்கு கொண்டுவரவிரும்புகிறேன்.
இக்காணிகள் அதன் உரிமையாளர்களான குடிமக்களுக்காக கூடியவிரைவில் விடுவிக்கப்பட வேண்டும்.
       (1) யாழ்ப்பாண மாவட்டம் வலிகாமம் வடக்கில் உள்ள காணிகள்
       (2) முல்லைத்தீவு மாவட்டத்தில் கேப்பாபுலவில் உள்ள காணிகள்
இக்காணிகளில் ஆயுதப்படையினர் தங்கியிருக்கின்றனர்.
இக்காணிகளுக்கு உரிமையாளர்களாகிய குடிமக்கள் தமது காணிகளை விடுவிக்கக்கோரி அக்காணிகளுக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில்ஈடுபட்டுள்ளனர்.
மேலே (1)ல் குறிப்பிடப்பட்டுள்ள யாழ்ப்பாண மாவட்டம் வலிகாமம் வடக்குக் காணியில் 25 வருடங்களுக்கு மேலாக தரைப்படையினர் இருந்து வருகின்றனர்.
பாரிய தாக்குதல் ஆயுதங்களுடன் தமிழீழவிடுதலைப்புலிகள் இருந்து வந்தகாலத்தில் அவர்கள் ஆயுதப்படைத்தளங்களுக்கு அச்சுறுத்தலாக இருந்த காரணத்தால் இக்காணிகளில்ஆயுதப்படையினர் நிலை கொண்டிருந்தனர்.
இத்தகைய நிலைமை பலவருடங்களுக்கு முன்பே முடிவுக்கு வந்துவிட்டது. இக்காணிகள் பல பரம்பரை காலமாக குடிமக்களால் அவர்களது குடியிருப்புக்காகவும் விவசாய செய்கைகளுக்காகவும் பயன்படுத்தப்பட்டவையாகும்.
குடிமக்களுக்கு சொந்தமான இக்காணிகளை மீண்டும் கையளிக்காது தொடர்ந்தும் வைத்திருப்பதற்கு எவ்விதமான நியாயபூர்வமான காரணங்களும் இல்லை.
இக்காணிகளை விடுவிப்பதாக அரசாங்கம் உறுதியளித்துள்ள போதிலும் அந்த உறுதிமொழிகள் இன்னமும் காப்பாற்றப்படவில்லையென மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
எனவே யாழ்.மாவட்டத்தில் வலிகாமம் வடக்கில் உள்ள இந்தக் காணிகள் அதன் உரிமையாளர்களான குடிமக்களுக்கு விடுவிக்கப்படுவதற்காக மிகவிரைவான செயற்ப்பாடுகளை மேற்கொள்ளுமாறு தங்களை தயவுடன் வேண்டிக்கொள்கிறேன்.
மேலே (2) குறிப்பிடப்பட்டுள்ள முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாப்புலவு காணிகளிலும் கூட 8 வருடங்களுக்கு மேலாக ஆயுதப்படையினர் நிலை கொண்டு தங்கியுள்ளனர்.
இக்காணிகளும் அதற்கு உரிமையாளர்களாகிய குடிமக்களால் குடியிருப்புக்காகவும் விவசாய செய்கைகளுக்காகவும் பயன்படுத்தப்பட்டு வந்தவையாகும்.
இக்காணிகளை அதன் உரிமையாளர்களாகிய குடிமக்களிடம் மீளஒப்படைக்கப்படாமைக்கு எவ்விதமான நியாயபூர்வமான காரணங்களும் இருக்க முடியாது.
எனவே முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள கேப்பாப்புலவுகாணிகளை அதன் உரிமையாளர்களாகிய குடிமக்களிடம் மீளக்கையளிப்பதற்கு தேவையான செயற்ப்பாடுகளை மிகவிரைவில் மேற்கொள்ளுமாறு தயவுடன் கேட்டுக்கொள்கிறேன்.
குடிமக்களுக்கு சொந்தமான இக்காணிகளில் ஆயுதப்படையினர் தொடர்ந்தும் தங்கியிருப்பது நாட்டின் சட்டங்களை மீறுகின்ற செயலாகும் என்பது தெளிவாக தெரிகின்றது. இத்தகைய நிலைமை தொடரக்கூடாது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
அதிமேதகு ஜனாதிபதி அவர்களே இக்காணிகளை அதன் உரிமையாளர்களாகிய குடிமக்களிடம் கையளிக்கப்படுவதற்கு தேவையான அறிவுறுத்தல்களை உரிய அதிகாரிகளுக்கு உடன்வழங்குமாறு தங்களை மிகப்பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு பாராளுமன்ற உறுப்பினரும் எதிர்க்கட்சித்தலைவருமான இரா. சம்பந்தன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.