இலங்கைக்கு ஐ.நா. மனித உரிமைகள் பேரவை கால அவகாசம் வழங்கக் கூடாது என கூறுபவர்கள், ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட பிரேரணையில் உள்ள விடயங்களை நடைமுறைப்படுத்த விரும்பவில்லையா என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவை இலங்கைக்கு கால அவகாசம் வழங்கக் கூடாது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட்டோர் கோரிக்கை விடுத்துள்ள நிலையில், இது தொடர்பில் நேற்று அரச ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

கடந்த 2015ஆம் ஆண்டு ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணையில் உள்ளடக்கப்பட்ட விடயங்களை இலங்கை அரசு முழுமையாக நிறைவேற்றவில்லை எனவும் அதற்கான கால அவகாசத்தை வழங்காவிட்டால் எவ்வாறு பிரேரணையில் உள்ள விடயங்களை நிறைவேற்ற முடியும் எனவும் சுமந்திரன் கேள்வியெழுப்பியுள்ளார்.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 34 ஆமர்வு நேற்று (திங்கட்கிழமை) ஜெனிவாவில் ஆரம்பிக்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த 30ஆவது அமர்வின் போது நிறைவேற்றப்பட்ட பிரேரணையில் உள்ள விடயங்களை நடைமுறைப்படுத்த இலங்கை அரசாங்கம் கால அவகாசம் கோர உள்ளதாகவும் இதன் போது சுட்டிக்காட்டினார்.

குறித்த பிரேரணையின் போது வழங்கப்பட்ட உறுதி மொழிகளை நிறைவேற்றிக் கொள்ள வேண்டும் என்பதே எமது தேவையாக உள்ளது என  சுமந்திரன் மேலும் குறிப்பிட்டார்.