FEB 23, 2017

தவறிழைத்தவர்கள் அதன் விளைவுகளையும் அனுபவித்தே ஆகவேண்டுமென தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், யுத்தக்குற்றத்தில் ஈடுபட்ட படையினருக்கு எதிராக உரிய விசாரணை நடத்தப்பட்டு தண்டிக்கப்படுவது கட்டாயமென கேட்டுக்கொண்டார்.

தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் ரீதியில் தீர்வு காணப்பட்டிருந்தால் ஆயுதப் போராட்டம் ஏற்பட்டிருக்காதென சுட்டிக்காட்டிய சம்பந்தன், இனியாவது இப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தீர்வுகாணப்பட வேண்டுமென்றும் வலியுறுத்தினார்.

தேசிய இனப்பிரச்சினைக்கான அரசியல்தீர்வு உட்பட தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் நாடாளுமன்றத்தில் நேற்று (புதன்கிழமை) சபை ஒத்திவைப்புவேளை பிரேரணையொன்றை கொண்டுவந்து உரையாற்றிய அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்-

”ஐக்கிய இலங்கைக்குள் தீர்வைக் காண்பதற்கு நாம் தயாராகவே இருக்கின்றோம். அதில் எமது கௌரவமும் எமது பிரதேசத்தில் நாமே எமது தலைவிதியை தீர்மானிக்கும் உரிமையும் பாதுகாக்கப்பட வேண்டும்.

நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்து இந்த பிரச்சினையினால் கடந்த காலங்களில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான தமிழ் மக்கள் நாட்டை விட்டுச் சென்றுள்ளதுடன், ஒரு இலட்சத்து 50 பேர்வரை உயிரிழந்துள்ளனர். அதேபோல், பாதுகாப்பு படையினரும் எமது போராளிகளும் ஏனைய சிவில் மக்களும் உயிரிழந்துள்ளனர்.

காணி பிரச்சினை, காணாமல்போனோர் விவகாரம், அரசியல் கைதிகள், உண்மை மற்றும் நல்லிணக்கம், இழப்பீடு, காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் போன்ற விடயங்கள் தொடர்பான அரசின் செயற்பாடுகளால் எமது மக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். இந்த விடயத்தில் நாம் வெளிப்படையாக இருக்க வேண்டும். கடந்த அரசைப்போன்று இந்த அரசும் தம்மை கொடுமைப்படுத்துவதாக மக்கள் கருதுகின்றனர்

மேலும், ஒட்டுமொத்த படையினரும் போர்க்குற்றம் இழைத்தார்கள் என்று கூறவில்லை. உயர் மட்டங்களிலிருந்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவின் பிரகாரம் அவர்கள் செயற்பட்டிருக்கலாம். சில படையினர் பாலியல் பலாத்காரம் மற்றும் படுகொலை போன்ற தனிப்பட்ட ரீதியிலான குற்றங்களிலும் ஈடுபட்டிருந்திருக்கலாம். அவைகுறித்து தகுந்த விசாரணைகள் நடத்தப்பட்டு உண்மைகள் கண்டறியப்பட்டு தண்டனை வழங்கப்படவேண்டும்” என்றார்.

http://athavannews.com/?p=422766