[ Wednesday,22 February 2017, 13:44:11 ]

நாடாளுமன்றத் தேர்தலில்  கடந்த 2015 ஆம் ஆண்டு 15 ஆயிரம் வாக்குகளை மாத்திரமே பெற்ற கட்சி உறுப்பினர்கள் அதைவிடவும் 4 மடங்கு அதிகமான வாக்குகளைப்பெற்ற சுமந்திரனை துரோகி என  தெரிவிப்பதாக  எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் நாடாளுமன்றத்தில் இன்று கடும் விசனம் வெளியிட்டார்​.​

 

மக்களின் ஆணையைப் பெற்ற  நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனை  மக்களால் நிராகரிக்கப்பட்ட சிலரே  துரோகி என தெரிவிப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

 

சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் இவ்வாறு கூறினார்.

 

எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவிக்கையில், 2015 இல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் 15 ஆயிரம் வாக்குகளை மாத்திரமே பெற்ற கட்சியின் உறுப்பினர்கள், அதைவிடவும் 4 மடங்கு அதிகமான வாக்குகளைப் பெற்ற சுமந்திரனை துரோகி என்கின்றனர்.

 

மக்களுக்காக சுமந்திரன் காத்திரமான சேவையை வழங்கி வருகிறார். அதனை நாம் பாராட்ட வேண்டும். மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் தமது  குறைப்பாடுகளை மறைப்பதற்கே சுமந்திரனை  துரோகி என்கின்றனர்.

 

இவ்வாறானவர்களுக்கு மத்தியிலேயே அரசியல் நடத்த வேண்டியுள்ளது என்பதை ஜனாதிபதியும், பிரதமரும் புரிந்துகொள்ள வேண்டும். அத்துடன், சுமந்திரனுக்கு விடுக்கப்பட்டுள்ள கொலை அச்சுறுத்தல் சம்பந்தமாக விசாரணை நடத்தப்பட்டு சம்பந்தப்பட்டவர்கள் நீதிமன்றத்தின் முன்நிறுத்தப்பட வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் நாடாளுமன்றத்தில் இன்று கேட்டுக்கொண்டுள்ளார்.

see more at; http://ibctamil.com/news/index/38469