ஐ.நா.வில் நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு கால அவகாசம் கோரவுள்ளதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ள நிலையில், அவ்வாறு கால அவகாசம் வழங்கப்படுமாக இருந்தால் உறுதிமொழிகளை நிறைவேற்றும் செயற்பாடுகளை ஐ.நா. மேற்பார்வை செய்யும் வகையில் தீர்மானம் கொண்டுவரப்பட வேண்டுமென எதிர்கட்சித் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இழைக்கப்பட்ட குற்றங்களுக்கு பொறுப்புக்கூறும் விடயத்தில் அரசாங்கம் பின்வாங்குவதாக குறிப்பிட்டுள்ள சம்பந்தன், அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளுக்கு மாறான இந்த நடவடிக்கையால் மக்கள் அதிருப்தி கொண்டுள்ளனர் என சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்தோடு, தமிழ் அரசியல் கைதிகளின் பிரச்சினை, காணி விடுவிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு இன்னும் தீர்வு காணப்படாமல் இருக்கும் இச் சந்தர்ப்பத்தில் இலங்கைக்கு மேலும் அவகாசம் வழங்கப்படுமாக இருந்தால், அதற்கு ஐ.நா.வின் மேற்பார்வை அவசியமானதென வலியுறுத்தியுள்ளார்.